ஐதராபாத்: இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை காண டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மற்றும் தள்ளுமுள்ளுவில்  சிக்கி இளம் ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பெண்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கும்  முதலாவது டி20 போட்டி  20-ஆம் தேதி மொகாலியில் தொடங்கியது. 2வது போட்டி நாளை (23ந்தேதி)   நாக்பூரில் நடைபெறுகிறது.  இறுதி மற்றும் 3-வது போட்டி வரும்  25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இதையடுத்து ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியை காண கவுண்டர்  டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி யது. இதனால் டிக்கெட் வாங்க அதிகாலை முதலே ரசிகர்களும், ரசிகைகளும் குவியத்தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

டிக்கெட் கொடுக்க தொடங்கியதும், ரசிகர்கள், ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு செய்து நெருக்கி தள்ளி முன்னேறினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இளம் ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர். இந்த தடியடியில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.