சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர். இதனால் 2 குழந்தைகள் அனாதையாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேதுபதி வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்து வந்ததுடன், சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் பிரியாவுக்கு உதவி செய்த பக்கத்து வீட்டுக்காரரிடம் நட்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சேதுபதி மனைவியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், சேதுபதியை தீர்த்துக்கட்ட பிரியா, தனது கள்ளக்காதலுடன் இணைந்து திட்டம் தீட்டினார். அதன்படி, நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சேதுபதியை, இருவரும் சேர்ந்து அடித்துக்கொன்று, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு மூடி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சேதுபதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், இதற்கு பிரியா சரியான பதில் கூறாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு சோதனை செய்தபோது, பிரியாவின் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, அதில், சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இறந்த உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பிரியாவிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில், சேதுபதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பிரியாவும், சேதுபதியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சேதுபதி சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்தது தெரியவந்ததால், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவ்ர் பிரியாவுக்கு உதவி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது.
இந்த கொலை சம்பவத்தால், பிரியா சேதுபதி தம்பதிகளின் 6வயது மற்றும் 10 மாத குழந்தை அநாதையாகி உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.