மனைவியைக் கொல்ல 6 மாதங்கள் ஆராய்ச்சி.. தற்கொலை கணவனின் அதிர்ச்சி தகவல்கள் டைரி…
பெங்களூரூவில் மனைவியைக் கொன்று விட்டு, பின்னர் கொல்கத்தாவுக்கு விமானம் ஏறிப் பறந்து மாமியாரையும் சுட்டுகொன்றார், ஆடிட்டர், ஒருவர். அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவரது ‘டைரி’,குறிப்புகள், சினிமாவை மிஞ்சும் ரகம்.
கொல்கத்தா போலீசார், அந்த தற்கொலை குறிப்பைப் படித்து விட்டு செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட பரபரப்பு தகவல்கள் இது:
அந்த ஆடிட்டரின் பெயர், அமீத் அகர்வால். மனைவி பெயர், ஷில்பா. இவரும் ஆடிட்டர் தான்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள மகாதேவபுரம் பகுதியில் வசித்து வந்தனர். 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
கணவன் –மனைவி இருவரும் மெத்தப் படித்தவர்கள். பணக்காரர்களும் கூட.
நாளாவட்டத்தில் இருவருக்கும் பிரச்சினைகள் தலை தூக்கின. விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
மனைவி ஷில்பா, அங்குள்ள வொய்ட்பீல்டு ஏரியாவில் உள்ள ’பிளாட்’டில் குடியிருக்க , அமீத் அகர்வால் அதே ஏரியாவில் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தார்.
விவாகரத்து தீர்ப்பு வருவதற்கு முன்பாக மனைவியைக் கொன்று விடுவது, என்று திடீர் முடிவு எடுத்தார், அமீத்.
(மனைவியைக் கொன்று விட்டு, அவரது குடும்பத்தையே வேரறுப்பது என்ற திட்டமும் அமீத்திடம் இருந்தது.)
எனினும் அமீத் அகர்வாலின் முதல் குறி மனைவி ஷில்பா தான்.
அவரை எப்படிக் கொல்வது?
கடந்த 6 மாதங்களாகக் கொலை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கூலிப்படையை ஏவி, மனைவியை கொலை செய்யும் திட்டம், அமீத்தின் மனதில் முதலில் உதித்தது. பீகார் மாநிலம் சென்று கூலிப்படையினர் எப்படி கொலை செய்வார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளார்.
என்ன காரணத்தாலோ அந்த முடிவை கை விட்டார்.
விஷப்பாம்பை ஏவி மனைவியைக் கொன்று விட்டு, அந்த பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்.
அந்த முடிவில் இருந்தும் பின் வாங்கியவர், கார் விபத்தில் மனைவியை சாகடிக்கலாம் என்று ஒரு கட்டத்தில் யோசித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை.
ஆடிட்டர் அமீத்துக்கு மன உளைச்சல் அதிகமானது.
‘’ கூலிப்படை..விஷப்பாம்பு..கார் விபத்து’’ என மனைவியை கொல்ல பிறரை நம்பி ’’காரியம்’’ செய்வதை விட தானே, மனைவியை கொல்வது என்று அந்த விடுமுறை தினத்தில் தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
வொய்ட்பீல்டில் மனைவி ஷில்பா வசிக்கும் பிளாட்டுக்கு சென்றுள்ளார். அவரும் வீட்டுக்கதவை திறந்துள்ளார்.
ஷில்பாவை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, ஒன்றும் நிகழாதது போல் தனது பிளாட்டுக்கு திரும்பி விட்டார். மறுநாள் கொல்கத்தாவுக்கு விமானம் ஏறி பறந்தார்.
ஏன்?
மேலும் சில கொலைகளை அரங்கேற்றத்தான் கொல்கத்தா பயணம்.
கொல்கத்தாவில் தான் மாமனார் வீடு உள்ளது.
மாமனார் குடும்பத்தை கொலை செய்யும் திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற வசதியாக , அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் அமீத், ஒரு வீட்டை பிடித்திருந்தார்.
கொலை திட்டத்தை கச்சிதமாக முடிக்கும் எண்ணத்தில் ஏற்கனவே மூன்று முறை கொல்கத்தாவுக்கு சென்று விட்டு வந்துள்ளார்.
கடைசி தடவை சென்றபோது, அங்குக் கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கி, தனது கொல்கத்தா வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
கடந்த திங்களன்று கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கியவர், வாடகை கார் பிடித்து தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, கூப்பிடு தூரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு நடந்தே போனார்.
மருமகனைப் பார்த்த மாமியார் (ஷில்பாவின் தாயார்) லலிதா அன்போடு,விசாரிக்க முற்பட்டபோது, துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்,அமீத்.
சம்பவ இடத்திலேயே லலிதா இறந்து போனார்.
அலறி அடித்து ஓடி வந்த மாமனார் சுபாஷையும் சுட்டுள்ளார்.
அவர் சுதாரித்து,கொண்டு, அறைக்கதவை அடைத்துக்கொண்டதால் தப்பித்தார்.
பின்னர் தனது வீட்டுக்கு வந்த அமீத், அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அமீத் சடலத்தையும், அவர் எழுதி வைத்துவிட்டுப்போன ’ தற்கொலை டைரி குறிப்பையும் கைப்பற்றினர்.
மொத்தம் 67 பக்கங்கள் கொண்டதாக உள்ளது, அவரது தற்கொலை குறிப்புகள்.
எனவே நீண்டகாலமாகத் திட்டமிட்டே இந்த கொலைகளை அமீத், அரங்கேற்றி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர், போலீசார்.
இதனிடையே கொல்கத்தா போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு போலீசார், வொய்ட்பீல்டில் ஷில்பா சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
கொல்கத்தா போலீசார் அடுத்த கட்ட விசாரணைக்காகப் பெங்களூரு வந்துள்ளனர்.
இந்த விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பா.பாரதி