கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்…..

தேவை இல்லாத செய்தியைக் கேட்போர் ‘’இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டேன்’’ என்று சொல்வது வழக்கம்.

டெல்லியில் இளைஞர் ஒருவர், துப்பாக்கி குண்டை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பரிதாபாத்தில் வசிக்கும் இளைஞர், தனது  கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள மருத்துவமனைக்கு காரில் சென்றார்.

காரில் போகும் போது இருவருக்கும் காரசாரமான வாக்குவாதம்,

ஒரு இடத்தில் காரை நிறுத்திய இளைஞர் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால், தனது காதில் சுட்டுள்ளார்.

துப்பாக்கிக் குண்டு காதுக்குள் பயணித்து மறு காது வழியாக வந்து, அருகே அமர்ந்திருந்த அவரது மனைவி கழுத்திலும் பாய்ந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு அங்குள்ள ஜப்தர்சிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மனைவி உயிருக்கு ஆபத்து இல்லை. கணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் ,அந்த இளைஞரின் இரண்டாவது மனைவி.

கடந்த சில மாதங்களாக இளைஞர் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.

கர்ப்பிணி மனைவியைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்ற போது, ’’வேலை இல்லா ’’விவகாரம் குறித்து சண்டை வெடித்துள்ளது.

சண்டை முற்றியதால், துப்பாக்கியும் வெடித்துள்ளது.

‘’ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் ஒரே குண்டு, இருவர் மீது பாய்வது மிகவும் அரிதான சம்பவம்’’ என்கிறார்கள், துப்பாக்கியோடு சதா புழங்கும் போலீசார்.

– ஏழுமலை வெங்கடேசன்