விழுப்புரம்: திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட நூற்றுக்கணக்கான அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும்,கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும்,, சொத்துவரி உயர்த்தப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டியு விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று விழுப்புரம் பழையப் பேருந்து நிலைய வளாகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது, சி.வி.சண்முகம் திடீரென சாலையில் அமர்ந்து போராடத் தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தியதாகக் கூறியும், அனுமதி வழங்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.