சென்னை,
ஹங்கம்மா என்ற சேவை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பிடுங்கி பித்தலாட்டம் செய்து வருகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த சேவைக்காக பிடிக்கப்பட்ட பணத்தை உடனே திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் நவீன முறையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
ஹங்கமா சேவை என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்காமல், ஒப்புதலைப் பெறாமல் மாதம் தோறும் 562 ரூபாய் பணம் வசூலிப்பது வணிக அறத்துக்கு எதிரானது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதாகும்.
ஹங்கமா சேவை என்பது பி.எஸ்.என்.எல் இணைப்பு மூலம் வீடியோ விளையாட்டுக்கள், திரைப்படங்கள், இசை ஆகியவற்றை வழங்குவதாகும்.
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை நுகர்வோர் சேவை மையத்திலிருந்து தொடர்பு கொள்ளும் அதிகாரிகள், பி.எஸ்.என்.எல் இணைப்பின் மூலம் வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் திரைப்படம் பார்க்கும் மதிப்பு கூட்டு சேவையை பெற விரும்புகிறீர்களா? என்று வினவுகின்றனர்.
தங்களுக்கு எந்த சேவையும் தேவையில்லை என்று பதிலளித்தாலும் கூட அவர்களின் இணைப்பில் ஹங்கமா சேவை வழங்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் பி.எஸ்.என்.எல் எண்களுக்கு தொடர்பு கொள்ளாமலேயே இச்சேவை அளிக்கப்படுகிறது.
இந்த சேவை மூலம் வழங்கப்படும் திரைப்படங்களுக்காக ரூ.249, இசைக்காக ரூ.170, வீடியோ விளையாட்டுக்களுக்காக ரூ.70 என மொத்தம் 489 ரூபாயும், அத்துடன் சேவை வரியாக 73.35 ரூபாயும் சேர்த்து ரூ.562.35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1000 கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பமின்றி ரூ.562 கூடுதல் கட்டணம் பறிப்பது மோசடியாகும்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தருமபுரி, சேலம் உட்பட பெரும்பாலான இடங்களில் இந்தச் சேவை கட்டாயமாக திணிக்கப்பட்டு பணம் பறிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 475 பேருக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதத்தில் 24,370 இணைப்புகளுக்கு ஹங்கமா சேவை மதிப்புக்கூட்டு சேவையாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 90 விழுக்காட்டினரிடம் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது அண்டை மாநிலமான புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் இதேபோன்ற அணுகுமுறை கடைபிடிக்கப் படுவதாக தெரிவித்தனர். ஹங்கமா சேவை தேவையில்லை என்று கூறுவோருக்கு அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்பத் தரவும் மறுக்கின்றனர்.
இதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், ஹங்கமா சேவையை வழங்குவது தனியார் நிறுவனம் என்பதும், அந்த நிறுவனத்தின் முகவரைப் போல பி.எஸ்.என்.எல் செயல்பட்டு கட்டாயமாக பணம் வசூலித்துத் தருகிறது என்பதும் தான்.
பி.எஸ்.என்.எல் நிறுவன சேவை மனநிறைவளிக்காததாலும், தடையற்ற செல்பேசி சேவை வழங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
மற்றொருபுறம் சில தனியார் நிறுவனங்கள் தரைமட்ட கட்டணத்திற்கு செல்பேசி மற்றும் அகண்ட அலைவரிசை சேவை வழங்குவதால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் போட்டிகளை சமாளிக்கும் வகையிலும், வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்கும் வகையிலும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவது தான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
மாறாக, வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி ஹங்கமா சேவையை திணித்து அதற்காக அவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவர்கள் வேறு நிறுவனங்களை நோக்கி செல்லும் நிலை உருவாகும். ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு எவ்வகையிலும் பயனளிக்காது.
அதிலும் குறிப்பாக ஒரு தனியார் நிறுவனத்திற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்த அளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஹங்கமா சேவை விருப்பமற்ற வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு மட்டுமின்றி, பி.எஸ்.என்.எல் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். எனவே, வாடிக்கையாளர் மீது ஹங்கமா சேவையை திணிக்கக்கூடாது. மேலும், ஹங்கமா நிறுவனத்துடன் பி.எஸ்.என்.எல் செய்துள்ள ஒப்பந்தத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.