வாஷிங்டன்

திக அளவில் வெப்பம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீசுவதால் மேற்கு அமரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.

மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இங்கு கடும் அனல் காற்று வீசி வருகிறது.  கடந்த வாரம் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.  தற்போது  இது 49.5 டிகிரியாக் அதிகரித்துள்ளது.   இங்கு வான்கூவர் நகரில் மட்டும் அனல் காற்றால் 134 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அத்துடன் மற்ற பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் சுமார் 486 பேர் அனல் காற்று மற்றும் கடும் வெப்பத்தால் உயிர் இழந்துள்ளனர்.  தொடர்ந்து கனடாவில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாகக் கடற்கரையிலும், நீச்சல் குளங்களிலும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.  வெப்பம் கடுமையாக உள்ளதால் கனடாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன.  மேற்கு கனடாவில் கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் தீ பிடித்துள்ளது.

இந்த காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.  எனவே வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   வெப்பம் மற்றும் அனல் காற்று கனடாவில் மட்டும் இன்றி மேற்கு அமெரிக்காவில் பல பகுதிகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.