ஐதராபாத் :
அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்வது போன்ற ‘பில்ட்-அப்’புடன், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது.
பிரதான கட்சிகளான ஆளும் டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசின. இந்த தேர்தலை நடத்த மாநகராட்சியும், மாநில தேர்தல் ஆணையமும் நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக செலவிட்டுள்ளது.
கொடுமை என்ன வென்றால் பாதி பேர் கூட தங்கள் வாக்கை பதிவு செய்யவில்லை.
ஐதராபாத் மாநராட்சியில் உள்ள 150 வார்டுகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. வெறும் 46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்கா என வர்ணிக்கப்படும் இந்த ஊரில் உள்ள ‘வெள்ளைச் சட்டைக்காரர்கள்’ (ஒய்ட் காலர்ஸ்) டி.வி.யை பார்த்தபடி வீட்டிலேயே பொழுதை கழித்துள்ளனர்.
“தொடர்ச்சியாக நான்கு நாள் விடுமுறை கொடுத்ததால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வெளியூர்களுக்கு ‘ஜாலி டூர்’ சென்று விட்டனர்” என தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோககீதம் இசைக்கின்றனர்.
சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை, திங்களன்று குருநானக் பிறந்த நாள் விடுமுறை, செவ்வாய்க்கிழமை ஓட்டுப்போடுவதற்காக விடுமுறை என மொத்தமாக நான்கு நாட்கள் லீவு
கிடைத்ததால், ‘ஜனநாயக கடமையை’ செய்ய மறந்து விட்டார்கள், ஐதராபாத் ஆட்கள்.
“இந்த மாதிரி பேர்வழிகளின் ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் பிடுங்க வேண்டும்” என ஓட்டுப்பதிவு முடிந்த நேற்று மாலையில் இருந்து நெட்டிசன்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
– பா. பாரதி