புதுடெல்லி:
மனிதர்களின் ஆக்கிரமிப்பால் 10 லட்சம் விலங்குகளும் தாவரங்களும் அழிந்துவிட்டதாக உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.
ஐநா சபையின் அரசுசார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித ஆக்கிரமிப்புகளால் இந்தியா உட்பட 130 நாடுகளில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 75% நிலமும், 40% கடற்பரப்பும், 50% உள்நாட்டு நீர்நிலைகளும் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
காடுகளை அழித்தும், விவசாயத்தை அழித்தும் நகரமயமாக்கலுக்கு மனிதர்கள் முயற்சிப்பதால் இயற்கையான உலகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் இமாலய பகுதி, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா படுகை ஆகிய பகுதிகளில் மனித ஆக்கிரமிப்புகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இயற்கையை பாதுகாக்க இன்னும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கான நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் உள்ளூர் முதல் உலகம் வரை உடனே எடுக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக 50 நாடுகளின் 145 நிபுணர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 50 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் இயற்கையின் தாக்கத்துக்கு இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 16-ம் நூற்றாண்டிலிருந்து கணக்கிட்டால், 680-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் அழிந்து போய்விட்டன.
2016-க்கு பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
10 லட்சத்துக்கு அதிகமான விலங்குகளும், தாவரங்களும் அழிந்துவிட்டன.
சுற்றுச் சூழலுக்காக போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1992 முதல் 100% நகர்ப்புறம் வளர்ச்சியடைந்துள்ளது. கனிம வளங்கள் 1% மட்டுமே உள்ளன.
ஆனால், தண்ணீர் தரம் மற்றும் மனித ஆரோக்கியத்தில் தொழிற்சாலைகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளன.
உலக அளவிலான கடல் மட்டத்தின் சராசரி 16-21 செ.மீட்டராக உள்ளது.
1980 முதல் வாயு வெளியேற்றம் 100% அதிகரித்துள்ளது. உலக அளவிலான சராசரி தட்பவெப்ப நிலை 0.7 டிகிரியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.