இந்திய தலைநகர் டெல்லியில், கொரோனாவால் இறந்த ஒரு காவல்துறை அதிகாரியின் ஆதரவற்ற குடும்பத்தினர், மதத்தைவிட மனிதம் மிகப்பெரிது என்பதை உணர்ந்துள்ளனர்.
தம் கருத்தின்மூலம் அதை அவர்கள் வலியுறுத்தவும் செய்துள்ளனர்.
டெல்லியில், 62 வயதான ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர், கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். அவருடைய மனைவியும் மகளும் மட்டுமே உடன் இருந்துள்ளனர். அந்த அதிகாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட, மனைவியும் மகளும் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளர்.
மகளுக்கு வயது 26. அப்பெண்ணின் உடன்பிறந்தவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த அதிகாரி இறந்துவிட்ட தகவல் கிடைக்கிறது. அவரின் உடலை வாங்கி, அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக, உறவினர்கள் உள்ளிட்ட யாரும் உதவிக்கு வர மறுக்கிறார்கள்.
மேலும், கொரோனாவை அப்பகுதிக்கு கொண்டுவந்த குடும்பம் என்று அக்கம் பக்கத்து ஆட்களும் கடந்த சில நாட்களாக அவர்களை கரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், காவல் துறைக்கு தகவல் கிடைக்க, தாயும் மகளும் வெளியே வந்து, மேலும் பலரிடம் தொலைபேசி மூலம் உதவி கேட்கிறார்கள். ஆனால், மறுப்புதான் பதிலாக கிடைக்கிறது.
அந்த காவல் அதிகாரியின் உடல் டெல்லியின் லோக் நாயக் மருத்துவமனையில் உள்ளது. தம் குடும்பத் தலைவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து, முறைப்படி அடக்கம் செய்வது குறித்து எவ்வித யோசனையும் இல்லாமல், நிர்க்கதியாய் நிற்கின்றனர் தாயும் மகளும்…
அந்தக் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பம். மருத்துவமனை நடைமுறைகள் முடிவடைந்த பின்பாக, மாலை 5 மணியளவில் உடல் கிடைக்கிறது. ஆனால், மயானத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் யாரையும் நிர்வாகத்தால் அனுப்ப முடியவில்லை.
இவர்கள் இருவரையும், மருத்துவமனைக்கு அழைத்துவந்த ஓலா ஓட்டுநரும், மயானத்திற்கு வர மறுத்துவிடுகிறார். அப்போது திக்கற்று நின்ற அவர்களுக்கு, ஹுசேன் என்ற 35 வயது முஸ்லீம் ஆட்டோ டிரைவர் உதவிக்கு வருகிறார்.
அவர்கள், அந்த இருவரையும், கொரோனாவால் இறப்பவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிறிஸ்துவ மயானம் இருக்கும், மங்கோல்புரியின் புத் விஹார் ஷம்சான் காட் என்ற இடத்திற்கு அழைத்து வருகிறார். அதற்குருகிலேயே முஸ்லீம் மற்றும் இந்து மயானங்களும் உள்ளன.
அந்த மயானத்தின் வெட்டியானாக சஞ்சய் என்ற ஒரு இந்து பணியாற்றுகிறார். அவர் 14 அடி குழியைத் தோண்டுகிறார். மாயானப் பணியாளர்கள் இத்தகைய இக்கட்டான சூழல்களைக் கையாள்வதற்காக, கல்ரா மருத்துவமனையில் பணியாற்றும் சானல் என்ற செவிலியர், பிபிஇ கிட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
கிறிஸ்தவ முறைப்படி அடக்கப் பிரார்த்தனை செய்யாமல் தன் கணவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டியுள்ளதே என்பதை நினைத்து, அவரின் மனைவி சொல்லொணா வேதனை அடைகிறார். இந்நிலையில், தற்செயலாக அந்த வழியாகச் சென்ற வடஇந்திய பாஸ்டர் ஒருவர், இறுதிப் பிரார்த்தனை செய்யாமல் சவஅடக்கம் செய்யப்படுவதைப் பார்த்து, மயானத்திற்குள் வந்து பைபிளின் குறிப்பிட்ட அத்தியாயத்தை வாசிக்கிறார்.
இவ்வாறாக, ஒரு கிறிஸ்தவ குடும்ப உறுப்பினரின் நெருக்கடியான சவ அடக்கம், முஸ்லீம் ஆட்டோ ஓட்டுநர், இந்து வெட்டியான், மருத்துவமனை செவிலியர் மற்றும் வழிப்போக்கராக வந்த கிறிஸ்தவ பாஸ்டர் ஆகியோரின் உதவியால் நடத்தப்படுகிறது.
இதனால்தான், இறந்துபோன அந்த காவல் அதிகாரியின் 26 வயது மகள், மனிதத்தன்மை என்பது எந்த மதம் மற்றும் நம்பிக்கையிவிடவும் உயர்ந்தது என்று அனுபவப்பூர்வமாக கூறியுள்ளார்.
மூலக்கட்டுரை: அபினவ் சாஹா