டி.வி.எஸ். சோமு பக்கம்

ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.

“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது..  ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்..  பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?

அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!

நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார்.  வாரம் ஒரு முறை  விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.

காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு  கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.

பள்ளி விடுமுறை நாட்களில் திடீர் திடீரென அப்பாவுடன் நானும் ராமேஸ்வரத்துக்குச் சென்றுவிடுவேன்.

பாம்பன் ரயில் நிலையத்துக்கு அடுத்து பாம்பன் பாலம் வரும். அதில் மெல்ல மெல்ல அசைந்தாடி தொடர்வண்டி நகரும் அந்த கணங்களுக்காகவே அந்த பயணம்.

பாம்பன் பாலம்

இந்தியாவிலேயே நீளமான கடல் தொடர்வண்டி பாலம்.  இரு புறமும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை நீலமும் இளம் பச்சையும் கலந்த வண்ணத்தில் நீர் படர்ந்திருக்கும் அழகே அழகு. பிரமிப்பூட்டும் அழகு.

பளிங்குமாதிரியான தண்ணீரினுள் கிடக்கும் சிலபாறைகளும் கண்ணுக்கு விருந்தளித்து அடிவயிற்றில் சிலீர் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

மெல்லிய கடல் அலைகளும், அவை வெளிப்படுத்தும் ஓசையும் சிலிர்க்க வைக்கும்.

தொடருந்து அசைந்தாடி செல்கையில், சாய்ந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தும்.   அச்சத்துடன் கூடிய பரவச அனுபவம் அது.

பாம்பன் பாலம் வழியாக செல்லும் கப்பல் (நான் பார்க்காத காட்சி)

இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். ஆனால் அந்தக் காட்சியை நான் கண்டதில்லை என்பது வருத்தமே.

(உலகின் ஆபத்தான சுற்றுலா பயணங்களில் இந்த பால பயணத்தையும் ஏதோ ஓர் அமைப்பினர் சேர்த்திருப்பது நினைவுக்கு வருகிறது.)

பாலம் முடிந்ததும் அந்தப் பக்கத் தீவில் முதலில் வருவது தங்கச்சி மடம் ரயில் நிலையம் என்று நினைவு.

முன்னதாக, ராமநாதபுரம் நிலையத்திலேயே தொடர்வண்டியில் ஆட்களுடன், கோழிகள் உள்ளிட்ட சில உயிரினங்களும் ஏறத்துவங்கும்.   அதோடு சிறு சிறு மூட்டை முடிச்சுகளும் ஏற்றப்படும்.

காரணம், அப்போது (1988க்கு முன்) ராமேஸ்வரம் செல்ல சாலை (பால) வசதி கிடையாது. தொடர்வண்டி மட்டுமே.

ஆகவேதான் மக்களோடு சேர்ந்து வீட்டுத் தேவைக்கான பொருட்களும் ரயில்களில் ஏறும் நிலை.

விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் தொடர்வண்டி பயணச்சீட்டு ஆய்வாளர்கள்கூட ராமநாதபுரத்தில் இருந்து தளர்வாய் நடந்துகொள்வார்கள். முன்பதிவு பெட்டிகளிலும், இடமிருந்தால் ஆட்களை ஏற்றிக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பொருட்களையும் அனுமதிப்பார்கள். அந்தத்தீவு மக்களின் நிலை உணர்ந்து இதர பயணிகளும் அவர்களுக்கு மறுப்பு சொல்வதில்லை.

தங்கச்சிமடக்குப் பிறகு சில தொடர்வண்டி நிலையங்கள் கடந்து ராமேஸ்வரம் நிலையம் வரும்.

இத்தொடர்வண்டிகளில் பணியாற்றுபவர்களுக்கு அந்த ஊர் மக்கள் அளித்த மரியாதையும் அன்பும் சொல்லில் அடங்காது.  குறிப்பாக, மக்களுடன் பழகும் வாய்ப்புள்ள பயணச்சீட்டு பரிசோதர்கள் என்றால் கூடுதல் மரியாதை..

நான் கவனித்திருக்கிறேன். பயணச்சீட்டு பரிசோதகரான என் அப்பாவைக்கூட,  “மாமா, அண்ணன்” என்று உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள்.

தொடர்வண்டி ஊழியர்கள் அனைவரையுமே அந்த ஊர் மக்கள் நன்கு அறிவர். அங்கு இந்த பணியாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்புதான். அங்கிருந்த (டூரிங்) திரையரங்குக்குச் சென்றால் சீட்டு அளிக்க மாட்டார்கள்.. “அட.. உங்களுக்கு என்னங்க சீட்டு..” என்று மரியாதையும் பதற்றமுமாய் தனியாக சிறப்பான நாற்காலிகளை எடுத்துப்போடுவார்கள்.  இடைவேளையில் (எவ்வளவுதான் மறுத்தாலும்)  தின்பண்டம், குளிர்பானம்,  தேநீர்.. என்று ஏக உபசரிப்பாக இருக்கும்.

ஒரு முறை திரையங்குக்கு தொடர்வண்டி பணியாளர்கள் குழு சற்று தாமதமாய் போய்ச் சேர்ந்தது. அதற்குள் படம், ஓடி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன.

திரையரங்கு உரிமையாளர் உடனடியாக படத்தை நிறுத்தி முதலில் இருந்து போடச் சொல்லியிருக்கிறார்.

அப்பாவுடன் நான் ராமேசுவரம் செல்லும்போதெல்லாம், அவருடன் பணியாற்றிய சாலமன் சார்தான் எனக்குத் துணை. அவர் தலைமையில்தான் மற்ற சில பணியாளர்களும் நானும் ஊரை வலம் வருவோம். எழுத்தாளராகவும் இருந்த என் அப்பா அழகிரி. விசுவநாதன், பணியாளர் அறையிலேயே கதை எழுத உட்கார்ந்துவிடுவார்.

நாங்கள் சாலமன் சார் தலைமையில் கடற்கரை, மார்க்கெட், திரைப்படம் என்று சுற்றி வருவோம்.

வழியில் பழக்கடையோ, தின்பண்டக்கடையோ தென்பட்டால், உடனே என்னிடம், “என்ன சாப்பிடுறே” என்பார் அன்போடு.

நான் மறுத்தாலும் வாங்கித்தருவார். அவரை கடைக்காரர்கள் அனைவரும் அறிவர். மலிவான விலைக்கு கொடுப்பார்கள். சிலர் “அட.. உங்ககிட்ட காசு வாங்கறதா” என்று   மறுப்பார்கள். ஆனால் சாலமன் சாரும் சரி, இதர தொடர்வண்டி பணியாளர்களும் சரி மலிவான விலைக்கு வாங்குவார்களே தவிர, இலவசமாய் வாங்கியதை நான் கண்டதில்லை.

சாமலன் சாருக்கு அங்கிருக்கும்  ராமநாதசுவாமி கோயிலின் மீது அத்தனை பிடிப்பு. கோயிலின் கட்டிடக் கலையை அங்குலம் அங்குலமாக ரசிப்பார்.. தனது ரசிப்பை நம்மிடமும் வெளிப்படுத்துவார்.

“ஆயிரத்துக்கும் மேல தூண்கள்.. அறுநூறு அடி நீளம்.. நானூறடி அகலம்.. ஆகா.. ஆகா.. அந்தக்காலத்திலேயே எப்படி கட்டியிருக்கான் பாரு” என்று ஒவ்வொரு முறையும் அவர் கண்கள் விரிய வியந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ராமேசுவரம் கோயில் பிரகாரம்

கோயிலிலும் எங்களுக்கு (!) ஏக மரியாதை இருக்கும். கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், அர்ச்சகர்கள் அனைவருமே, தொடர்வண்டிப் பணியாளர்களை அத்தனை அன்போடு வரவேற்பார்கள். எப்போதுமே நமக்கு (!) சிறப்பு தரிசனம்தான்.  பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட அர்ச்சகர் (பெயர், குமார் அல்லது குமரேசன் என்று நினைவு) எங்களுடன் வந்து கோயிலை சுற்றிக்காண்பிப்பார்.

“எங்க கோயிலை எங்களுக்குத் தெரியாதா.. நீங்க வரணுமா” என்று அவரிடம்  சாலமன் சார் கேட்பதுண்டு.

அவரோ, “பெரியவங்க வந்திருக்கீங்க.. கூட வராட்டி எப்படி” என்று வலுக்கட்டாயமாக உடன் வருவார்.

ராமநாதசுவாமி கோயில் போலவே புகழ் பெற்றது கோதண்டராமர் கோயில். முதன் முதலில், நாட்டுக்கு வெளியே அரசாங்கம் அமைக்கப்பட்டது இங்குதான்.

இராமாயணத்தில், விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம் பிணக்கு கொண்டு பிரிந்து ராமனுடன் வந்துவிடுகிறான் அல்லவா? அவனுக்கு இங்குதான் ராமர், பட்டாபிசேகம் செய்து வைத்தாராம்.

அப்போது இலங்கை, ராவணன் ஆட்சியின் கீழ் இருந்தது.  நாட்டைப் பிடிக்கும் முன்பே பட்டாபிசேகம்!

கோதண்டராமர் கோயில்

பின்னாட்களில் இந்தியாவுக்கு வெளியே நேதாஜி அமைத்த இந்திய அரசாங்கம், பாலஸ்தீனத்துக்கு வெளியே யாசர் அராபத் அமைத்த அரசாங்கம், தற்போது ஈழத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கம் எல்லாவற்றுக்கும் முன்னோடி ராமாயணத்தில் இருக்கிறது போலும் என்று பின்னாட்களில் எனக்குத் தோன்றியது உண்டு.

ராமேஸ்வரத்தின் இதர இடங்களான ராமர் பாதம்,   துறைமுகம் என ராமேஸ்வரத்தில் சுற்றாத இடம் இல்லை. ஒரு முறை பக்கத்தில் இருக்கும் தீவு ஒன்றுக்கு படகில் சென்று வந்ததும்  மறக்க இயலா நினைவு. (முயல்தீவு என்று ஞாபகம்)

அதே போல் மிக முக்கியமானது தனுஷ்கோடி. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில்  ஏற்பட்ட புயல் மற்றும் சூறாவளியால் அந்நகரமே அழி ந்தது.  சென்னையில்  இருந்து  இராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த தொடருந்தும் அடித்துச் செல்லப்பட்டது.  அதில் பயணித்த 123 பேரும் பலியானார்கள்.

மிகக்  கொடூரமான அந்த நிகழ்வுக்குப் பிறகு, பிறகு தனுஷ்கோடியை வாழத்தகுதியற்ற ஊராக அறிவித்தது தமிழக அரசு.

கடலில் “மிதந்து செல்லும்ட வேன்

ஒரு முறை அங்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் சாலமன் சார்.  குறிப்பிட்ட தூரம் வரைதான் பாதை இருக்கும். அதன் பிறகு தனியார் வேன்கள்தான் தனுஷ்கோடிக்குச் செல்லும். கணுக்கால் அளவு கடல் நீரில் அந்த வாகனம் செல்வதைப் பார்க்கையில், கடல் மீது வேன் மிதந்து செல்வது போலத் தோன்றும்.

புயலால் சிந்தைத தேவாலயம் ( தனுஷ்கோடி)

புயலின் கொடுமையான தாக்குதலுக்கு சான்றாக, மண்ணில் அரைகுரையாக புதைந்திருக்கும் தண்டவாளம், மேற்கூரை அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சிதிலமடைந்து கிடக்கும் தனுஷ்கோடி ரயில் நிலையம், அதே  நிலையில் இருக்கும் தேவாலயம் என்றும் காணக்கிடைக்கும்.

அப்போது  ராமேசுவரம் தீவிலேயே மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம் என்றால் தொடர்வண்டி நிலையம்தான். மக்களின் ஒரே போக்குவரத்து வழி அதுதானே!

ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வருவதோ உள்ளே செல்வதோ.. பெரும்பாடு. பக்கத்திலேயே மார்க்கெட். கேட்கவா வேண்டும் மக்கள் நெரிசலுக்கு?

அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.

அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.

நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.

அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.

அதுவரை தொடருந்தையே நம்பியிருந்த அத்தீவு மக்கள் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களில் உற்சாகமாக கடல் கடந்தனர்.

இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.

இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.

தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.  என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.

அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.

எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.

பயணச்சீட்டு பரிசோதகர், “பத்து நிமிடங்கள் காத்திருங்கள்.. அலுவலகம் சென்று வந்துவிடுகிறேன்.. சேர்ந்தே வலம் வரலாம்” என்றார்.

காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.

தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.

நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.

அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.

உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.

அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம்.  (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)

கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.

அதற்கு கடைக்காரர் வெடுக்கென்று சொன்னார்: “அதுக்கு என்ன.. எல்லாருக்கும் ஒரே விலைதான் விருப்ம் இருந்தா  வாங்கு.. இல்லேன்னா கிளம்பு!”

பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.

பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.

அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன்  கூறியதும் நினைவிருக்கிறது.

பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:

“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..

மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”