கேரளா,

கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை களைய செய்து சோதனை செய்தது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை சம்பாதித்தது.

இதுபோன்ற சோதனைகளை தென்மாநிலங்களில் மட்டுமே மத்திய கல்வி வாரியம் செயல்படுத்தி வருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வர தடை செய்த சிபிஎஸ்இ, வெளிநாடு கவர்ச்சி  உடைகளான ஜீன்ஸ், லெங்கிங்ஸ் அணிய உத்தரவிட்டு இந்திய பாரம்பரி யத்தை கேலிக்குரியதாக்கியது.

இந்நிலையில்  கேரளத்தில் நீட் தேர்வின் போது மாணவியரின் உள்ளாடையைக் களையச் சொன்னது தொடர்பாக சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட்  தேசியப் பொது நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்தத் தேர்வின்போது அரைக்கைச் சட்டைதான் அணிந்திருக்க வேண்டும் எனக் கூறியதால் முழுக்கைச் சட்டை அணிந்த மாணவர்கள் அரைக்கை அளவுக்குச் சட்டையை வெட்டிவிட்டதும், மாணவியர் தோடு, கம்மல் ஆகிய நகைகளைக் கழற்றியதும் தமிழகத்தில் நடந்தேறின.

இதேபோல் கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு மாணவியிடம் உள்ளாடையைக் கழற்றிவிட்டுத் தேர்வு எழுதுமாறு தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு மாணவி பைவைத்துத் தைத்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததால் அதைக் கழற்றிவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவியின் தந்தை கண்ணூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மாணவியரின் பெற்றோர் பலர் காவல்துறையில் புகார்கள் அளித்துள்ள நிலையில், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் இது குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இதனிடையே இது குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடந்துள்ள அத்துமீறல்களை எந்த நாகரிகமான சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துப் பத்து நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இக்கு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் அறிவிக்கை அனுப்பியுள்ளதாகப் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

 

சேலை அணியக்கூடாதாம், ஆனால் ஜீன்ஸ் போடலாமாம்! சிபிஎஸ்சி-ன் அடாவடி