சென்னை: கார் ஓட்டுனருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த காவல் ஆய்வாளருக்கு 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைய நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாநகரங் களில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு எனப்படும் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன்படி, இருச்சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1000, ஒரு வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ. 1000, செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரூ. 1000, மீண்டும் அதேதவறை செய்தால் ரூ. 5000, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ. 5000, கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ. 1000, நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் ரூ. 500, மீண்டும் அதே தவறை செய்தால் ரூ. 1500, ஆட்டோக்களில் சீருடை அணியாவிட்டால் ரூ. 500, அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 500 என அபராத தொகை ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில காவல்துறையினர், அபராதம் வசூலிக்கும் எண்ணத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதும், வாகன ஓட்டிகளை தரக்குறைவாக நடத்தும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி அருகே நண்பர் ஒருவருடன் காரில் சென்ற கார் உரிமையாளருக்கு அந்த பகுதியில் சோதனை செய்த காவல் ஆய்வாளர் சிலைமணி என்பவர் 100 ரூபாய் அபராதம் விதித்தார். அதற்கான ரசீதையும் ஆய்வாளர் சிலை மணி வழங்கியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காரின் உரிமையாளர் மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது. காவல் ஆய்வாளர் சிலை மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி பரிந்துரைத்துள்ளார், இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.