வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, மொத்தம் 6 போர்களில் அந்நாடு சந்தித்த உயிரிழப்புகளைவிட அதிகம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் தற்போது அதிகம்பேர் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது அமெரிக்கா. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்த எண்ணிக்கை விபரம் அந்நாட்டில் ஒரு சோகமான புள்ளிவிபர வரலாற்றை வழங்குகிறது. அதாவது, அமெரிக்க புரட்சி, 1812ம் ஆண்டு நடைபெற்ற போர், இந்திய, மெக்ஸிகோ, ஸ்பானிய – அமெரிக்கப் போர், வளைகுடாப் போர் ஆகிய 6 போர்களில், மொத்தமாக அந்நாடு இழந்த குடிமக்களின் எண்ணிக்கை 9961 மட்டுமே.

ஆனால், கொரோனா தொற்றால், அந்நாடு அதிகமாக இழந்துவிட்டது மற்றும் இன்னும் வரும் நாட்களில் அந்நாட்டில் அதிகம் பேர் பலியாகவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலேயே இதுவரை நியூயார்க் மாகாணத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நியூஜெர்சி மாகாணத்திற்கு இரண்டாமிடமும், மிக்சிகன் மாகாணத்திற்கு மூன்றாமிடமும் கிடைத்துள்ளன.