சென்னை: திமுக அரசு மீண்டும் 6 சதவிகிதம்  சொத்து வரியை உயர்த்தியதை  கண்டித்து வரும் 8ந்தேதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது சென்னை மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்து உள்ளது.

40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும்  8.10.2024 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசைக் கண்டித்தும் மக்கன் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக். 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மனித சங்கிலிப் போராட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.