புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் அலுவலகம், பிரதமர் அலுவலகத்தைவிட, மிக அதிக பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதானது விவாதங்களை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் அமிதாப் காந்த். இந்த அமைப்பின் துணைத் தலைவராக ராஜீவ் குமாரும், இதர 4 உறுப்பினர்களாக வி.கே.சரஸ்வத், ரமேஷ் சந்த், பைபெக் டெப்ராய் மற்றும் வி.கே.பால் ஆகியோரும் உள்ளனர்.

இவர்களுக்கான அலுவலக புதுப்பிப்பு நடவடிக்கைதான், தற்போதைய நிலையில், அதிகாரிகள் மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்த அலுவலகப் புதுப்பித்தல் பணிகளுக்காக, ரூ.9.26 கோடி செலவானதாக கூறப்படுகிறது.

ஆனால், பிரதமர் அலுவலக புதுப்பித்தல் பணிக்கே ரூ.34 லட்சம்தான் செலவானது என்று சொல்லப்பட்ட நிலையில், நிதி ஆயோக் அலுவலகத்திற்கான செலவு, அனைவரையும் வாய்பிளக்க வைக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிதி ஆயோக் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், புனரமைப்பு பணிக்காக ரூ.8.4 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, தோட்டப் பராமரிப்பிற்கு மட்டும் ரூ.34 லட்சம் மற்றும் நெட்வொர்க்கிங் மற்றும் டெலிபோன் கேபிள் அமைப்பிற்காக ரூ.52 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

– மதுரை மாயாண்டி