டில்லி

பிரதமர் மோடியின் பி எம் கேர்ஸ் நிதிக்குச் சீனாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ஹுவாவே ரூ. 7 கோடி நன்கொடை அளித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினரை சீனப்படைகள் தாக்கியதில் 20 வீரர்கள் உயிர் இழந்தனர்.  70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இதையொட்டி நாடெங்கும் கடும் சீன எதிர்ப்பு அலை வீசி வருகிறது.   அகில இந்திய வர்த்தக சம்மேளனம் சீனப் பொருட்களை இறக்குமதி செய்யவோ விற்கவோ வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.  பல அரசுத் துறைகளில் சீன அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவுதலைத் தடுக்க பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதியைத் தொடங்கி உள்ளார்.  இந்த நிதியில் வரும் நன்கொடைகளைக் கொண்டு நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்கவும் கொரோனா நிவாரணத்துக்கான உதவிகளை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த நிறுவனத்துக்குப் பல நிறுவனங்களும் செல்வந்தர்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

சீனாவைச் சேர்ந்த பிரபல மொபைல் நிறுவனமான ஹுவாவே பி எம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7 கோடி நன்கொடை அளித்துள்ளது.   அத்துடன் 6 மாநிலங்களுக்கு கோரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளது.  இந்த தகவலை அந்நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைமை செயல் அதிகாரி ஜே சென் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “சீனாவில் எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தைக்க் கொண்டு இந்தியாவில் கொரோனா ஒழிப்புக்கான பணிகளை நடத்த உள்ளோம்.  இதற்காக உடல் வெப்ப நிலை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்க உள்ளோம்.  எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவருடைய அவ்வப்போதைய உடல் வெப்ப நிலை உடனடியாக கண்காணிக்க முடியும்.  இது சீனாவில் பயன்படுத்தப் பட்டு வெற்றி கண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்கனவே பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  ரிலையன்ஸ் ஜியோ தனது குழுமங்களுடன் இணைந்து ரூ.500 கோடி அளித்துள்ளது.  ஏர்டெல் நிறுவனம் தனது குழுமங்களுடன் இணைந்து ரூ.100 கோடி நிதி அளித்துள்ளது.