மும்பை
தனது அனுமதி இன்றி தன்னை ஏன் பெற்றீர்கள் என பெற்றோர் மீது வழக்கு தொடர இளைஞர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.
மும்பை நகரில் வசிக்கும் இளைஞரான ரஃபேல் சாமுவேல் பல புரட்சிகரமான கருத்து உடையவர் ஆவார். அவர் இனப் பெருக்கம் என்பது ஒரு நாசிச வாதம் என்னும் கருத்துக்கொண்டவர் ஆவார். சுமார் 27 வயதாகும் இவர் குழந்தை பெற்றுக் கொள்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார். குழந்தை பெறுவதனால் ஒரு உயிர் உண்டாகி பூமிக்கு மேலும் சுமை ஏற்படுவதாக பேசி வருகிறார்.
ரஃபேல் சாமுவேல் தனது சமீப முக நூல் பதிவில் ”எனது பெற்றோரை நான் மிகவும் நேசிக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் தங்கள் சுகம் மற்றும் மகிழ்ச்சிக்காக என்னை பெற்றெடுத்தற்காக வருந்துகிறேன்.
இவர்கள் சுகம் அனுபவிக்க நான் ஏன் உலகில் பிறக்க வேண்டும்? நான் வாழ நான் எதற்காக உழைத்து பொருள் ஈட்டி வருந்த வேண்டும்? இது தவறானது.
இதை ஒட்டி நான் எனது பெற்றோர் எனது சம்மதம் இன்றி என்னை பெற்றதற்காக வழக்கு தொடர உள்ளேன்.” என பதிந்துள்ளார். இந்த பதிவு பலராலும் மறுபதிவு செய்யப்பட்டு வைரலாகிறது.
இது குறித்து ரஃபேல் சாமுவேலின் தாய் கவிதா கர்நாட் சாமுவேல், “எனது மகன் எங்கள் மீது வழக்கு போடும் அளவுக்கு துணிச்சல் கொண்டுள்ளதை பாராட்டுகிறேன். நானும் என் கணவரும் வழக்கறிஞர்கள் தான்.
ரஃபேல் நீதிமன்றத்தில் அவருடைய அனுமதியை எப்படி அவர் பிறக்கும் முன்பு பெற முடியும் என்பதை விளக்க வேண்டும். அதன் பிறகு நான் அவர் அனுமதியை பெறாத என் தவறை ஒப்புக் கொள்கிறேன்” என கூறி உள்ளார்.