அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 4

Must read

               (காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

காமராஜர் முதல்வர் ஆனவுடன், அவருக்கு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று பெரியாரின் ஆதரவு. கடந்த 1952ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட காமராஜரை எதிர்த்து நின்றவர் ஜி.டி.நாயுடு. அத்தேர்தலில், நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் பெரியார், காமராஜரை கடுமையாக விமர்சிக்கிறார்.
ஆனால், 1954ம் ஆண்டு ‘பச்சைத் தமிழன்’ என்ற லேபிளுடன் தனக்கு கிடைக்கும் பெரியாரின் ஆதரவை, காமராஜர் வாரி அணைத்துக்கொள்ளவும் இல்லை; அதை வேண்டாமென்று நிராகரிக்கவும் இல்லை. அதைத் தேவையான அளவில் பேலன்ஸ் செய்து புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல முடியும்.
பெரியாரின் போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர் காமராஜர். “நாம் இன்று அனுபவிக்கிற சுதந்திரமான வாழ்க்கை, பெரியாரின் போராட்டத்தினால் வந்த விளைவு” என்று அவர் கூறியிருக்கிறார் மற்றும் எல்லா நேரங்களிலும் அவர் பெரியார் குறித்து மரியாதையுடனேயே நடந்துகொண்டுள்ளார்.

பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் நடைபயணமாக கலந்துகொண்டவர் காமராஜர். தனக்கு காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புகள், பெரியாருடைய போராட்டத்தின் விளைவால் நேர்ந்தவை என்பதை உணர முடியாத அளவிற்கு சாதாரண ஆள் இல்லை காமராஜர்!
அதேசமயம், தான் காங்கிரஸ்காரர் என்ற முறையில், அவர் நேக்காக நடந்துகொள்ளவும் தவறவில்லை. தனது அமைச்சரவையில் ஆர்.வெங்கட்ராமனை சேர்த்துக்கொண்டதோடு, தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதிலும் பிராமணர்களுக்கான கோட்டாவை கொடுத்து விடுவார்.
மேலும், கடந்த 1957ம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் கலவரத்திற்கு பின்பு, சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியபோது, அது காமராஜர் அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

எம்.ஆர்.ராதாவின் இராமாயண நாடகத்திற்கு சட்டசபையில் தடைச்சட்டமே கொண்டுவரப்பட்டது. ஒரு நாடகத்திற்கு, சட்ட அவையில் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது உலகிலேயே அதுதான் முதன்முறை என்கிறார்கள். மேலும், திராவிட இயக்கத்தினர் எழுதிய சில புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் பெயரை, ‘தமிழ்நாடு’ என்பதாக மாற்ற வேண்டுமென விருதுநகர் சங்கரலிங்கம் என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த நிகழ்வை, எளிதாகக் கடந்து சென்றார் காமராஜர்.

விருதுநகர் தியாகி சங்கரலிங்கம்

மாநிலத்திற்கு அதிகளவு திட்டங்களைக் கொண்டுவந்தபோதிலும், தான் ஒரு தேசியவாதி என்பதில், இறுதிவரை கண்ணுங்கருத்துமாக இருந்தார் அவர். (இந்த விஷயத்தில், ‘வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது’ உள்ளிட்ட பல ‘ரைமிங்’ முழக்கங்களை முன்வைத்து, திமுக மேற்கொண்டுவந்த ஓயாத உக்கிரப் பிரச்சாரம், காமராஜரை அசரவிடாமல் விரட்டிக் கொண்டேயிருந்தது என்றும் கூறலாம்.) காமராஜரின் இந்த தேசியவாத உணர்வுதான், தேவிகுளம், பீர்மேடு, நொய்யாற்றின் கரா போன்ற நீராதாரம் சார்ந்த பகுதிகள் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளை கேரளத்திடம் பறிகொடுத்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்திக்கு எதிரானவர் காமராஜர் என்று கூறப்பட்டாலும், அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், கூட்டுத் தலைமைத்துவத்தில் நம்பிக்கையில்லாதவராக கூறப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் மொழி வெறியினால், இந்தி மொழி, அனைத்து மாநிலங்கள் மீதும் திணிக்கப்பட்டு, அதை சென்னை மாகாணத்தின் பக்தவச்சலம் அரசாங்கம் கடும் எதிர்ப்புகளையும் மீறி அமல்படுத்த முயன்றபோது, காமராஜர் மேற்கொண்ட அதுதொடர்பான நிலைப்பாடுகள் எத்தகையதாக இருந்தன என்பது குறித்து போதிய தரவுகள் கிடைக்கவில்லை.
லால் பகதூர் சாஸ்திரிக்கு அடுத்து, பிரதமர் பதவியேற்க துடித்த மொரார்ஜி தேசாயும் மொழி வெறியர் என்பதால்தான், இந்திரா காந்தியைக் கொண்டுவந்தார் காமராஜர் என்று கூறப்படுவதுண்டு.
ராஜாஜியை (பெரியாரின் நெருங்கிய நண்பர்) எப்படியேனும் ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றிவிட வேண்டும், திமுகவினர் மீது இருந்த கோபம், காமராஜரின் செயல்திறன், சிந்தனை மற்றும் அவரின் சமூகப் பின்னணி, அந்த இடத்தில் காமராஜர் இல்லையென்றால், ராஜாஜியின் ஆட்களில் யாரேனும் ஒருவர்தான் அமர்ந்திருப்பார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்தான் பெரியார், காமராஜரை ஆதரித்தார் என்று கூறப்படுவதுண்டு. நாம், அதுகுறித்து இங்கே விரிவாக ஆராயத் தேவையில்லை.
கடந்த 1954ம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு, ராஜாஜிக்கு காங்கிரஸ் கட்சியில் முன்புபோல ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. முன்பும், அவர் காமராஜரிடம் முட்டி மோதியே இருக்க வேண்டியிருந்திருந்தாலும், 1954க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இப்போது, ஆட்சித் தலைவர் பொறுப்பிலும் இருக்கிறார் காமராஜர். கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்ந்திருப்பவர் அவருக்கு வேண்டப்பட்ட ஆள். ஒட்டுமொத்தத்தில், தமிழக காங்கிரஸின் பெரும்பகுதி காமராஜரிடம்!
அக்காலகட்டத்தில், ராஜாஜி தனது 70களில்(வயது) இருந்தாலும், அயர்ந்து போவதற்கு தயாரில்லை. இந்திய அரசியலில், ராஜாஜியின் ‘விடாது கருப்பு’ செயல்பாடுகள் பெரிய ஆச்சர்யங்களை உண்டாக்குபவை! திமுகவுடன் 1967ம் ஆண்டு அவர் அமைத்த தேர்தல் கூட்டணி பெரிய வெற்றிபெற்றது. அப்போது ராஜாஜிக்கு வயது 89. அப்போதும், முதல்வர் பதவிக்கு அடிபோட்டார் அவர்! அதுமட்டுமா, கிட்டத்தட்ட தனது 93வது வயதில், காமராஜருடன் சேர்ந்து, 1971ம் ஆண்டில் தேர்தல் கூட்டணி அமைக்கிறார் ராஜாஜி! தன் வாழ்நாளின் கடைசி கட்டம் வரை அரசியல் செய்துகொண்டிருந்திருக்கிறார் மனிதர்!
அகில இந்திய அளவில், ஏன், உலகளவில்கூட பலரால் அறியப்பட்டாலும், தனக்கென்று பெரிய கெளரவப் பட்டங்களை வைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், அப்பதவியை வகித்த ஒரே இந்தியர்! உள்ளிட்டப் பெருமைகளெல்லாம் இருந்தாலும்கூட, மதுரை நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில்கூட தனது கட்சியை நிறுத்தி, பலத்தை நிரூபிக்க இவர் தயங்காததை நினைக்கையில் ஆச்சர்யம் ஏற்படாமல் இருக்குமா! ராஜாஜியின் அரசியல் என்பது ஆச்சர்யத்திற்கு மட்டுமல்ல, மிகப்பெரிய ஆய்வுக்கும் உரியது!

காங்கிரஸில் இருந்துகொண்டு, காமராஜரை அசைத்துப் பார்க்க முடியாத ராஜாஜி, காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி(சிஆர்சி) என்ற ஒரு அமைப்பை உண்டாக்குகிறார். இந்த அமைப்பு, மற்றொரு காமராஜர் எதிர்ப்பாளரான முத்துராமலிங்க தேவரின் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மறைமுக தேர்தல் உடன்பாடு வைத்துக்கொள்கிறது. இவையெல்லாம் நடப்பது 1957ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர்.
இந்த அணி 1957ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மொத்தம் 59 இடங்களில் போட்டியிட்டு, 17 இடங்களைக் கைப்பற்றுகிறது. 5 சுயேட்சை உறுப்பினர்களும் இக்கூட்டணியில் இணைய, தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சியாகிறது சிஆர்சி அணி. பின்னர், சிஆர்சி என்பது இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்(ஐஎன்டிசி) என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு, 1959ம் ஆண்டு மதுரை நகராட்சி தேர்தலில், ஐஎன்டிசி, திமுக, பார்வர்ட் பிளாக், சிபிஐ என்று ஒரு விசித்திரக் கூட்டணி அமைகிறது. இந்தக் கூட்டணி, அத்தேர்தலில் மொத்தம் 26 இடங்களில் வெல்கிறது. காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே ஜெயிக்கிறது.
அதே 1959ம் ஆண்டில் சுதந்திரா கட்சியை நிறுவுகிறார் ராஜாஜி. இக்கட்சியில் பல பிரபலங்களும் அகில இந்திய அளவில் இணைகிறார்கள்!
1962 மக்களவைத் தேர்தலில், அகில இந்திய அளவில் இக்கட்சி மொத்தமாக 18 இடங்களைப் பெறுகிறது. மேலும், பல மாநிலங்களில் முக்கிய கட்சியாக உருவெடுக்கிறது. 1967ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இக்கட்சி பெற்றிருந்த இடங்களின் எண்ணிக்கை 44.
தமிழக அளவில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, 1962ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது ராஜாஜியின் கட்சி. இதற்கு திமுகவிலேயே எதிர்ப்பு எழுகிறது. மேலும், ராஜாஜியின் எதிர்ப்பை மீறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி வைக்கிறது திமுக. பார்வர்ட் பிளாக் கட்சியும் கூட்டணியில் இணைகிறது.
இந்தக் கூட்டணி, சட்டசபை தேர்தலில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களை வெல்கிறது. அதில் திமுகவின் கணக்கு 50, சுதந்திரா கட்சியின் கணக்கு 6.
காங்கிரஸுக்குள் இருந்துகொண்டு, காமராஜரை எதுவும் செய்ய முடியாத ராஜாஜி, அதிலிருந்து வெளியேறி, காங்கிரசின் அரசியல் எதிரிகளோடு கூட்டணி வைத்து, தன்னால் ஆனதை செய்கிறார். இவரின் நீண்டநாள் ஆசை நிறைவேறுவது 1967ம் ஆண்டுதான். அத்தேர்தலில் ராஜாஜி இடம்பெற்ற திமுகவின் மெகா கூட்டணி காங்கிரசை ஆட்சியிலிருந்து இறக்குகிறது. தனது சொந்த தொகுதியான விருதுநகரில், காமராஜரே, திமுகவிடம் தோற்றுப் போகிறார்.

தனது அரசியல் வாழ்வில், ராஜாஜிக்கு கிடைத்த பெரிய சந்தோஷங்களுள் ஒன்றாக அதுவும் இருந்திருக்கலாம். ஆனால் பிந்தைய ஆண்டுகளில், ராஜாஜி – காமராஜர் கூட்டணி, 1971 பொதுத்தேர்தலில், கருணாநிதி – இந்திரகாந்தி கூட்டணியை எதிர்த்து தமிழ்நாட்டில் களம் காண்கிறது. ஆனால், எடுபடவில்லை. பரிதாப தோல்வியே கிடைக்கிறது.
இப்போது, திமுகவிற்கு வருவோம்.
காங்கிரஸ் கட்சிக்குள், கடந்த 1930கள் தொடக்கத்திலேயே அரசியல் அட்டகாசங்கள் பல செய்து, காந்தியாரையே எதிர்த்து, தன் குருநாதர் சத்தியமூர்த்தியையே கட்டுப்படுத்தி, பெரிய சமூக அந்தஸ்து மற்றும் கல்விப் பின்புலம் கொண்டவர்களாய் காங்கிரஸில் இருந்த பலரையும் ஓவர்டேக் செய்து, முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்ட காமராஜருக்கான சமாளிக்க முடியாத ஒரு அரசியல் போட்டி தமிழக அளவில் விரைவிலேயே உருவானது.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் இருந்தபோது நடைபெற்ற 1952 தேர்தலில் போட்டியிடாத திமுக, தமிழகம் பிரிக்கப்பட்டவுடன் நடந்த 1957 தேர்தலில் களமிறங்கியது. அப்போது அதை ஒரு பெரிய சக்தியாக காமராஜர் நினைத்திருப்பாரா? என்று தெரியவில்லை. ஆனால், காங்கிரசில் பலரும் எள்ளி நகையாடினார்கள்.

தனித்து, வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்ட திமுக, மொத்தமாக 15 இடங்களில் வென்றது. காமராஜருக்கு அது கட்டாயம் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இனிவரும் நாட்களில், காங்கிரஸ் கட்சிக்கான மாபெரும் போட்டியாளர் திமுக தான் என்பதை உணர்ந்து கொள்வது, காமராஜர் போன்ற அரசியல் நிபுணருக்கு பெரிய விஷயமெல்லாம் இல்லைதான்!
வருகிறது 1962 பொதுத்தேர்தல். இப்போதும்கூட, திமுகவை சற்று குறைவாகவே மதிப்பிட்டுவிட்டாரா காமராஜர்? என்று நினைக்கும் வகையில் அவரின் சில நடவடிக்கைகள் அமைகின்றன. கடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்ற 15 தொகுதிகளை குறிவைக்கிறார். ஆனால், இந்தத் தேர்தலில் திமுக – சுதந்திரா – பார்வர்ட் பிளாக் – சிபிஐ என பெரிய கூட்டணி அமைகிறது. திமுக முன்னர் வென்ற 15 தொகுதிகளிலும் அக்கட்சியை எப்படியேனும் வீழ்த்த வேண்டுமென்று சாம பேத தான தண்டங்களை களமிறக்கும் காமராஜர், 14 தொகுதிகளில் தான் நினைத்ததை சாதிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் முன்பு வென்றிருந்த அறிஞர் அண்ணா, மோசமான முறையில் வீழ்த்தப்படுகிறார். காமராஜரின் இந்த முயற்சிகள், அரசியலில் அவரின் நடவடிக்கைகள் நேர்மையானவை என்று கூறப்படுவதை பெரியளவில் கேள்வியெழுப்புகின்றன. அவரின் இந்த முயற்சியில், திமுகவின் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைக்கிறார். மீதி 14 தொகுதிகளிலும் திமுக தோற்கிறது.
ஆனால், இதில் காமராஜர் எதிர்பாராத ஒன்று என்னவெனில், அந்த 15 தொகுதிகளில் 14 ஐ கோட்டைவிட்ட திமுக, புதிதாக 49 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. தனது எண்ணிக்கையை 3 மடங்கிற்கும் மேலாக உயர்த்திக்கொண்டு மிரட்டியது. 7 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றது.
பின்னாளில், திமுக முதன்முதலாக அரியணை ஏறியபோது, தான் முதல்வராக இருக்கும் அவையில், காமராஜர் இல்லையே என்று வருத்தப்பட்டார் அண்ணா! மேலும், காமராஜரின் தோல்வியை திமுகவினர் பலர் கொண்டாடியதையும் அவர் ரசிக்கவில்லை.
 நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி
 

More articles

Latest article