சென்னை,

ந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதன்முறையாக டிரெயினிங் முடித்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார்.

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்  1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் பங்குபெற்று ஓராண்டு சிறப்பு பயிற்சி பெற்றார். நேற்றுடன் பயிற்சி முடிந்தது.

அதைத்தொடர்ந்து பிரித்திகா யாஷினிக்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கை ஒருவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவி வழங்கி, இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்முதலாக காவல்துறையில் பதவி கொடுத்துள்ளது என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளது.

ஆனால், திருநங்கையான யாஷினி இந்த பதவியை பெற நடத்திய சட்ட போராட்டங்கள் எத்தனை என்பதை சற்றே பார்க்கலாம்…

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. இவர் பிறக்கும்போது  ஆணாகத்தான் இருந்தார். நாளடைவில் உடலில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக  அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். அதைத் தொடர்ந்து தனது பெயரையும்  பிரித்திகா யாஷினி என்று மாற்றிக்கொண்டார்.

கடந்த 2015ம்  ஆண்டு முன்பு தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது, பிரித்திகா அதற்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பம்  திருநங்கை என்ற காரணத்துக்காக  நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது.

அதையடுத்து தேர்வில் கலந்துகொண்ட பிரித்திகா  தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

ஆனாலும், பிரித்திகா விடவில்லை. மீண்டும் உயர்நீதி மன்றத்தை நாடினார்.  வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தை கடுமையாக சாடியது. மீண்டும்  நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என  உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக அவர் மீண்டும் உடல்தகுதி தேர்வுக்கு சென்றார். அங்கு 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்ததாக கூறி அவரை தேர்வுக்குழு மீண்டும்  தகுதி நீக்கம் செய்தது.

மீண்டும் ஐகோர்ட்டு உதவியை நாடினார் பிரித்திகா. நீதிமன்றம்  தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்த கூறியது.

அதைத்தொடர்ந்து  நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது,  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்று முக்கியத்துவ மான தீர்ப்பை வழங்கினர்.

அதில் , ”தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டின் தீர்ப்பு காரணமாக பிரித்திகா யாஷினி காவல்தேர்வில் வெற்றி பெற்று, ஒரு வருட பயிற்சிக்கு சென்றார்.

தற்போது பயிற்சி முடித்து தர்மபுரியில் பணியாற்ற இருக்கிறார்.  உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.

 இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.