சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட முடியும் என கடந்த ஜூன் மாதம் சூரப்பா கூறியிருந்தது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழகஅரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க மாநிலஅரசு முடிவு செய்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகச் சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் 5ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சியினர், சூரப்பா தமிழக முதல்வர் போல செயல்படுகிறார், கொள்கை முடிக்க அவர் யார் என்று கேள்வி எழுப்பபட்டது. “மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது” என்று கூறப்பட்டது.
தனிப்பட்ட முறையில் தான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவில்லை எனத் தெரிவித்த சூரப்பா, “மாநில அரசுக்குத் தெரியாமல் நான் எந்த கடிதத்தையும் மத்திய அரசுக்கு எழுதவில்லை. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு ஆகியவை மாநில அரசின் கைகளில் இருக்கிறது. தற்போது என்ன நடைமுறை இருக்கிறதோ அதுதான் தொடரும். 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகக் கேள்வி எழுந்தபோது, மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நான்தான் முதலில் கடிதம் எழுதினேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.