டெல்லி: மத்திய அரசின் முடிவுக்கு முன்பே தமது தொகுதி மேம்பாட்டு நிதியை காங்கிரஸ் எம்பி சசிதரூர் பயன்படுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் சம்பளம், படிகள், மற்றும் ஓய்வூதியத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சரவையில் அதற்கு ஒப்புதல் அளித்தது.
எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியையும், 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஆனால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்பாகவே காங்கிரஸ் எம்பி சசிதரூர் தமது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொண்டு விட்டார். கொரோனா வைரசுக்கு தேவையான மருந்து பொருட்களை அவர் வாங்கி, அதை பற்றி தமது டுவிட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு இன்று மேலும் 1000 விரைவான ஆர்டி- பிசிஆர் சோதனை கருவிகள் மற்றும் 1000 பிபிஇ கருவிகள் வழங்கப்படுகின்றன என்பதில் பெருமை. 1000 ரேபி டெஸ்ட் கிட்கள் மற்றும் 7500 பிபிஇ கருவிகளை அடுத்த வாரம் வழங்கப்படும். அரசாங்கம் அவற்றை வெட்டுவதற்கு சற்று முன்பு எனது எம்.பி. நிதியை நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது: கேரளாவில் கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். எம்பிக்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை குறைப்பதற்கான மையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும், மக்கள் துன்பப்படுவதை ஒற்றுமையைக் காட்ட இது ஒரு நல்ல வழியாகும் என்று கூறி உள்ளார்.