இந்தியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது எப்படி? ஐகோர்ட் கேள்வி

Must read

மதுரை: இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது எப்படி? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 2015-ம் ஆண்டு உதகை  ஆயுத தொழிற்சாலையில் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படியில் அவர் எழுத்து தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
ஆனால் அவருக்கு பணி வழங்காமல் 40 மதிப்பெண்ணுக்கு கீழாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சரவணன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சரவணனுக்கு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந் நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பாக மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்தது. மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
குறிப்பாக மத்திய அரசு பணிகளில் மாநிலங்களில் நியமிக்கப்படும் போது அந்தந்த மாநில மொழி தொடர்புடையவர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கே இந்தியில் தேர்ச்சி பெற முடிய வில்லை. ஆனால் அவர்கள் தமிழகம் வந்து தேர்வெழுதி தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இது எப்படி என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பான கேள்விகளை எழுப்பினால், மத்திய, மாநில அரசுகளின் கொள்கை ரீதியான முடிவு என்று அறிவிப்பு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மின்வாரியம், ரயில்வே துறையில் தற்போது அதிகளவில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.
அதனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பணி கிடைப்பது இல்லை.  இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

More articles

Latest article