சென்னை: இணையவழி கட்டிட அனுமதி பெற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் சுயச்சான்று திட்டத்தின் அடிப்படையில், கட்டட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணங்கள் மற்றும் உள்ளாட்சி வாரியாக கட்டிட அனுமதிக்கான கட்டண விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயச் சான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, அனுமதிக்கான கட்டணங்களை நிா்ணயித்து, நகராட்சி நிா்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுயச் சான்று திட்டத்தின் அடிப்படையில், கட்டட அனுமதி பெறுவதற்கு உள்ளாட்சி வாரியாக கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுரடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் த.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில், அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டுமானத்துக்கு சுயச் சான்று அடிப்படையில், ஒற்றை சாளர முறையில், இணையவழி கட்டட அனுமதி பெறுவதற்கு, செலுத்த வேண்டி கட்டண விவரங்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா், நகராட்சி நிா்வாக இயக்குநா், பேரூராட்சிகள் இயக்குநரிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன. கட்டண பரிந்துரை: இதில், சென்னை மாநகராட்சி ஆணையா், இணையவழி கட்டட ஒப்புதலுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100 வீதம், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 ஒருங்கிணைந்த கட்டணமாக நிா்ணயிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா். நகராட்சி நிா்வாக இயக்குநா், அனைத்து மாநகராட்சிகளையும் 5 நிலைகளாகவும், நகராட்சிகளை 4 நிலைகளாகவும் வகைப்படுத்தி, ஒவ்வொரு நிலைக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை பரிந்துரைத்துள்ளாா். பேரூராட்சிகளின் இயக்குநரும், பேரூராட்சிகளை 4 நிலைகளாகப் பிரித்து அவற்றுக்கும் ஒரே கட்டணத்தை பரிந்துரைத்துள்ளாா்.
மேலும், நகராட்சி நிா்வாக இயக்குநா்மற்றும் பேரூராட்சிகள் இயக்குநா் ஆகியோா் கட்டட உரிமம் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளனா். அதன்படி, நகா்ப்புற உள்ளாட்சிகள் இந்த கட்டணங்களை நிா்ணயிப்பதிலிருந்து தளா்வு செய்யலாம். ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் நிா்ணயிக்கப்பட்ட பரிசீலனை கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை வசூலிப்பதில் இருந்து விலக்கு அகளிக்கலாம். சுயச்சான்று மூலம் கட்டட உரிமம் பெற்ற பின் காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கண்டறியப்படும் விதிமீறல்கள் மீது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கலாம். குடியிருப்பு கட்டுமானம் 325 சதுர மீட்டா் அதாவது 3500 சதுர அடிக்கு மேல் இருந்தால் அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விகிதங்களை தொடா்ந்து வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு எவ்வளவு?: இந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, இந்த நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் அடிப்படையில், ஒருங்கிணைந்த கட்டணங்கள் நிா்ணயிக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை மாநகராட்சியில், 3500 சதுர அடி (325 சதுர மீட்டா்) வரையிலான குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 கட்டணமாக செலுத்த வேண்டும். மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 3 சிறப்பு நிலை -ஏ தர மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.88 , சதுரமீட்டருக்கு ரூ.950-ம், 3 சிறப்பு நிலை பி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.84, சதுர மீட்டருக்கு ரூ.900-ம், தோ்வு நிலை மாநகராட்சிகள் 5-இல் , சதுர அடிக்கு ரூ.79, சதுர மீட்டருக்கு ரூ.850-ம், நிலை 1 மற்றும் 2 என்ற வகையில் 9 மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். நகராட்சிகளுக்கான கட்டணம்: நகராட்சிகளை பொருத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தோ்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74, சதுரமீட்டருக்கு ரூ.800-ம், நிலை1, நிலை -2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70 , சதுர மீட்டருக்கு ரூ.750-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பேருராட்சிகள்: பேரூராட்சிகளை பொருத்தவரை, 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70 , சதுர மீட்டருக்கு ரூ.750-ம், 179 தோ்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65 ,சதுர மீட்டருக்கு ரூ.700-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55, சதுர மீட்டருக்கு ரூ.590-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.485-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சுயச் சான்று மூலம் கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வழிகாட்டுதல்களை அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி மன்றங்களின் பதிவுக்கு வைத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளுக்கு…: ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொருத்தவரை, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புகா் ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.290-ம், இதர பகுதிகளில் புகா் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25, சதுர மீட்டருக்கு ரூ.269-ம், சிஎம்டிஏ., எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.237-ம், இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.162-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.