மும்பை: மல்லையா விவகாரத்தில் இன்னும் எத்தனை முறை தெரியாது என்று சொல்வார்கள் என்று மத்திய அரசை நோக்கி சிவசேனா கேள்வி எழுப்பி இருக்கிறது.
இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய்மல்லையா இங்கிலாந்தில் உள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அவர் மீதான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, மல்லையாவை ஆஜர் செய்வது குறித்த பிரமாண பத்திரம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், இங்கிலாந்தில் மல்லையா மீதான சட்ட நடவடிக்கைகள் ரகசியமாக நடந்து வருகிறது, அது பற்றி தெரியாது என்று தெரிவித்தது.
இந் நிலையில், மல்லையா விவகாரத்தில் இன்னும் எத்தனை முறை தெரியாது என்று சொல்வார்கள் என்று மத்திய அரசை நோக்கி சிவசேனா கேள்வி எழுப்பி இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: எதிர்க்கட்சி எந்த தகவலையும் கோரும்போது தரவு எதுவும் கிடைக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. நீதிமன்றம் விவரங்களை கோரும் போது தெரியாது என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எத்தனை முறை மற்றும் எத்தனை சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தெரியாது என்று சொல்லப் போகிறது?
ஒரு நடிகரின் தற்கொலை, பாலிவுட்டின் போதைப்பொருள் தொடர்பு மற்றும் ஹத்ராஸ் வழக்கின் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் ஒவ்வொரு விவரத்தையும் அரசாங்க இயந்திரங்கள் அறிந்திருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்த மல்லையா வழக்கில் இது குறித்து நடவடிக்கை இல்லை என்றும் சிவசேனா கண்டித்துள்ளது.