டில்லி
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 406 பேருக்குப் பரவும் எனச் சுகாதார அமைச்சக இணை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் நிலையில் உள்ள தொற்று மூன்றாம் நிலையை அடையலாம் என அஞ்சப்படுவதால் இந்த ஊரடங்கு விதிகள் பல இடங்களில் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதார அமைச்சக இணை செயலர் லவ் அகர்வால், “கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமுதாய இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமாகி உள்ளது.
நோய் பரவுதல் என்பது அந்த வைரஸின் ஆர் நாட் என்னும் அளவுகோலை வைத்துக் கணக்கிடப்படுகிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் குழு நடத்திய ஆராய்ச்சியின்படி கொரோனாவுக்கு ஆர் நாட அளவு 1.5 முதல் 4 வரை உள்ளது. இதை சராசரியாக 2.5 என எடுத்துக் கொண்டால் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் 30 நாட்களில் 406 பேருக்குப் பரவும்.
இவ்வாறு பரவுவதைத் தடுக்க தனிமைப்படுத்தல் மற்றும் சமுதாய இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவுவதை 2.5 நபர்களாகக் குறைக்க முடியும். எனவே அரசு அளித்துள்ள விதி முறைகளை அரசு தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.