சென்னை: என்னை சந்தித்ததற்காக எத்தனை பேரை கைது செய்வீர்கள்?, ‘அதிகார வெறி’ தோற்கப் போவது பழனிசாமி தான்! என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.
கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது எடப்பாடி அரசின் காவல்துறை என குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில், காட்டுமன்னார் கோவில் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தபோது, கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கீரன் என்ற காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுத்தார்.
இந்த நிலையில், காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள வீராணந்தபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்த நிலையில், நிலத்தை வழங்கியவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கக்கோரி இளங்கீரன் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இதானால், ஆக்கிரப்புகளை அகற்றும் பணி பாதிப்படைந்த தால் இளங்கீரனை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைக் கண்டித்து கண்டமங்கலம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இளங்கீரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இளங்கீரன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது முதல்வர் பழனிசாமியின் காவல்துறை! எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்? அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான்! என குறிப்பிட்டுள்ளார்.