
புதுடெல்லி: அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக்.
இந்தாண்டு அர்ஜுனா விருது பெறுவோர் பட்டியலில், தனது பெயர் விடுபட்டுப் போயுள்ளதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார் மாலிக்.
இவர், ஏற்கனவே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் என்பதால், இவரின் பெயர் தவிர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரத்திற்கும், அனைத்துவித விருதுகளையும் பெற வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதற்காகவே, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்படுகிறார்கள். ஒருநாள் அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமென்பது எனது ஆசை” என்றுள்ளார் அவர்.
கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இவர் வெண்கலம் வென்றார். அதுதவிர, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஆசியன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]