டில்லி,

ந்த ஆண்டு எத்தனை அரசு அதிகாரிகள்மீது ஊழல் புகார்கள் பதியப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி-Central Vigilance Commission) விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை அரசு அதிகாரிகள் மீது இந்த ஆண்டு 20,943 ஊழல் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 30 முதல் நவம்பர் 4-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.செளதரி  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை)   அரசு அதிகாரிகள் மீது மொத்தம் 20,943 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. இதில், 17,420 புகார்கள் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. 96 புகார்கள் மட்டுமே தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த 2016-ம் ஆண்டில் 51,207 புகார்களும், 2015-ம் ஆண்டில் 32,149 புகார்களும் பெறப்பட்டன. 2014-ல் 35,332 புகார்களும், 2013-ல் 35,332 புகார்களும் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 19,557 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இப்போதைய நிலையில் 850 ஊழல் வழக்குகள் சிபிஐ விசாரணையில் உள்ளன. அவற்றில் 14 வழக்குகளின் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

500 வழக்குகள் ஓராண்டுக்கு குறைவாகவும், 245 வழக்குகள் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு உள்பட்ட காலகட்டத்திலும், 61 வழக்குகள் 2 முதல் 3 ஆண்டுகளாகவும், 31 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகளும் நிலுவையில் உள்ளன.

நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 6,358 ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவற்றில் 178 வழக்குகள் 20 ஆணடுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.