சென்னை: திமுகவின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து மத்தியஅரசுதான் ரத்து செய்யும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இதை சுட்டிக்காட்டி, எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய (ஜனவரி 10ந்தேதி) அமர்வில், நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
நீட் நுழைவுத் தேர்வு, டங்ஸ்டன் சுரங்க அனுமதி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது,நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் நீட் தேர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது என கூறினார்.
இதற்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றவர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோதோ அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியின்போதோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்துக்கு வந்தது. மத்திய அரசால்தான் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியும். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றார்.
“நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது. எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைந்துள்ள நிலையில், கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்தோ, வரவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றியோ எதுவுமே தெரிவிக்காமல் பழைய பிரச்சினையை எடுத்து தவெக தலைவர் விஜய் கருத்து செய்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. “விஜய் பனையூரில் இருந்து இருப்பை உறுதி செய்து கொள்ளும் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.