சென்னை: 

ஆர்.கே.நகரில் போட்டியிடும் தங்கள் அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி உட்பட சில அமைச்சர்கள் பெயரோடு பணப்பட்டியல் ஒன்றை வருமானவரித்துறை வெளியிட்டது.

இது குறித்து டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளதாவது: “ஆர்.கே. நகரில் எனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது. ஏற்கெனவே நான் சொன்னது போல 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இந்தியாவிலேயே சிறந்த தொகுதியாக ஆர்.கே. நகரை ஆக்குவேன். எனது வெற்றி உறுதியானது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். கடந்த மார்ச் 23ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் நாமினேசன் செய்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.

மார்ச் 26ம் தேதியில் இருந்து, வாக்காளர்களுக்கு நான் பணம் அளிப்பதாக புகார் தெரிவித்துவருகிறார்கள் சிலர்” என்று தெரிவித்த தினகரன், மேலும் கூறியதாவது: “ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எனது சார்பில் பணம் கொடுப்பதாகவும், அதற்கான ஆவணம் என்று வருமானவரித்துறை வெளியிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் எனக்கும் ஒரு பதிவு வந்தது. . வருமானவரித்துறை இதை கைப்பற்றியது என்றால், அதை எப்படி வெளியே ஊடகங்களுக்கு அளித்தார்கள்? அதில் முதல்வர், அமைச்சர்கள் பெயர்களை எல்லாம் டைப் செய்து அதற்கு நேராக ஏதோ தொகையை டைப் செய்திருக்கிறார்கள்.

இது நம்பகத்தன்மை இல்லாதது. நான் வெற்றிபெறப்போகிறேன் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தேர்தலை தள்ளிவைக்க நடக்கும் சதி இது” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.