முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து…
“ஒரு மருத்துவராக ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘தொற்றுக் கிருமியால் அவருக்குத் தாக்கம் உள்ளது. தொற்றுக் கிருமிகள் தொற்றக் கூடாது என்பதற்காகத் தான் அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. கண்டிப்பாக அனுமதிக்கவும் கூடாது. தொற்றுக் கிருமியின் தாக்கத்தால் ஆரம்பத்தில் சுய நினைவுகூட இல்லாமல் இருந்து இருக்கலாம். காய்ச்சல் அதிகமாக இருந்திருக்கும். தொற்றுக் கிருமியைப் போக்க எந்த சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தாலும், முழுமையாக அவர் செயல்பாட்டுக்கு வர கொஞ்ச நாட்கள் ஆகும்.’’
‘‘எம்.ஜி.ஆர். அப்போலோவில் இருந்ததற்கும், இப்போது ஜெயலலிதா அப்போலோவில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?’’
‘‘எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டபோதும் எல்லோரையும் அவர் அறைக்குள் பார்க்க அனுமதித்தது கிடையாது. மூன்று பேர் ஷிப்ட் முறையில் வாசலில் உட்கார்ந்து இருப்போம். வருபவர்களிடம் நாங்களே பதில் சொல்லி அனுப்பிவிடுவோம். அதற்குக் காரணம் அவருக்கும் தொற்றுக்கிருமிகள் பாதிப்பு இருந்தது. ஆனால், யார் வந்தாலும், அந்தத் தகவலை எம்.ஜி.ஆரிடம் மறக்காமல் சொல்லிவிடுவோம். இவ்வளவு நெருக்கடிகள் அப்போது கிடையாது.’’
எம்.ஜி.ஆருக்கு டயாலிசிஸ் பண்ணியதில், ஏற்பட்ட பிரச்னையால் திடீர் என மூளையில் ரத்தம் உறைந்து வாதம் ஏற்பட்டது. அதன் பிறகு கோமா நிலைக்கு சென்றதால், என்ன செய்வது என்ற குழப்பம் எங்களுக்குள் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் சுயநினைவில் இல்லை என்பதை வெளியே சொல்லுவதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. நெடுஞ்செழியன் `வேண்டாம்’ என்றார். ஆர்.எம்.வீரப்பன் `நடந்ததை மக்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார். அதன்படி நான்தான், எம்.ஜி.ஆர் சுயநினைவு கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். முக்கிய முடிவுகள் எடுக்க கேபினெட் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவைக் குழு பல்வேறு முடிவுகளை எடுத்தோம். சட்டசபையையே எம்.ஜி.ஆர் இல்லாமல் கலைத்தோம். அது எம்.ஜி.ஆருக்கே தெரியாது. வேட்பாளர்கள் தேர்வும் நடந்தது. எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து எந்தத் தகவலையும் நாங்கள் மூடிமறைக்கவில்லை. அப்போது எம்.ஜி.ஆரை அருகில் இருந்து நான் பார்த்ததால்தான் வெளிப்படையாகத் தகவல் சொல்ல முடிந்தது. இப்போது மருத்துவமனையே அறிக்கையை வெளியிடுகிறது.”