நாட்டின் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்தியஅரசு 1998ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளிடமிருந்து விவசாயம் தொடர்பான பணிகளுக்கு கடன் வாங்குவதற்கான வசதி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2020-21) மத்திய பட்ஜெட்டை வாசித்த நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ .2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும், இதனால், 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி ஏற்படுத்தப்படும் என பல அறிவிப்புகளை அள்ளி வீசினார்.
மேலும், விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு வகுக்கப்பட்டு உள்ளதாகவும், நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இதுவரை 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் விவசாய கடன் மற்றும் நிவாரணங்கள் பெற மத்தியஅரசு அறிவித்துள்ள கிசான் கிரெட்டி கார்டு, நெருக்கடி காலத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு 4% வட்டியில் மூன்று லட்சம் வரை கடன் கிடைக்கிறது.
நபார்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் உள்பட பல கிராம வங்கிகளும் கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.
ஆனால், தமிழகத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள் இன்னும் கிஷான் கிரிடிட் கார்டை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் நொடிந்து போய் உள்ள நிலையில், மத்தியஅரசு சில உதவிகளை அளித்துள்ளது. இதைப் பெற கிஷான் கிரெடிட் கார்டு தேவைப்படும் நிலையில், ஒவ்வொரு விவசாயிகளிடமும் கிஷான் கிரிடிட் கார்டு இருப்பது அத்தியாவசியமாகி உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் ஆன்லைன் மூலம் கிஷான் கிரிடிட் கார்டு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து கார்டு பெறுவது எப்படி என்பதை எளிமையாக விளக்குவதே இந்த கட்டுரை…
கிஷான் கிரிடிட் கார்டு பெற தகுதியானவர்கள் யார் யார்?
மத்திய அரசின் இந்த கடன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கடன் வசதி பெற முடியும். ஆனால், இதன்மூலம் கடன் பெறுபவர் விவசாயம் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
மேலும், 18 முதல் 75 வயது வரை உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் (வாரிசுதாரர் போல்) இருப்பது அவசியம்.
வெறொருவர் நிலத்தில் குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயியும் இந்த கார்டு பெற முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஏதாவது ஒரு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, அங்கு குறிப்பிட்டுள்ள பிரிவில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
பொதுவாக கிராம வங்கிகளில் , நேரடியாக சென்றே விண்ணப்பம் செய்து கார்டு பெற முடியும். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..
இங்கே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) இணையதளம் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனுள் சென்று, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி விண்ணப்பித்து, கிரிடிட் கார்டு பெற முடியும்..
வங்கி இணையதள முகவரி: https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் உள்ள Application form (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது) கிளிக் செய்து, அந்த விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, அருகே உள்ள வங்கியின் கிளையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவனங்களை மறவாமல் இணைக்க வேண்டியதும் கட்டாயம். அதன்படி, கடன்பெறுபவரின் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், புகைப்பட அடையாள ஆதாரம், நில ஆவணங்கள் போன்றவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பை பெற்ற வங்கி அதிகாரி, உங்களது விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்து ஓரிரு நாளில் பதில் தெரிவிப்பார்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது தொடர்பான தகவல் உங்களை மொபைல் எண்ணுக்கு வந்து சேரும். அந்த குறிப்பிட்ட எண்ணை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டதும், உங்கள் பெயரிலான கிஷான் கிரிடிட் கார்டு உங்களுக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கப்படும்.
ஒரு விவசாயி கிஷான் கிரிடிட் கார்டு பெற்றுவிட்டால், அவருக்கு மத்தியஅரசு அறிவித்துள்ள கடன்கள் விரைவாக பெற முடியும். குறுகிய காலத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் வாங்கிய பின்னர் விவசாயி தனது நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். விவசாயி கடனுக்கு 7 சதவீத வட்டி செலுத்த வேண்டும்.
ஆனால் விவசாயி சரியான நேரத்தில் கடனை செலுத்தினால், அவருக்கு வட்டிக்கு மூன்று சதவீத சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, அவர் 4 சதவீத வீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.
இதுபோன்ற கடன் சலுகைகளை பெற ஒவ்வொரு விவசாயியும் கிஷான் கிரிடிட் கார்டு பெறுவது அவசியம்.