ஆயுதம் ஏந்திய ராமநவமி விழா!! மேற்குவங்கத்தை கைப்பற்ற காவிகள் குறி

Must read

கொல்கத்தா:

கடந்த 2014ம் ஆண்டில் நாடு முழுவதும் மோடி அலை வீசி பாஜ வெற்றி பெற்ற போது மேற்கு வங்கத்தில் இந்துத்வா அமைப்புகள் வன்முறை கட்டவிழ்த்துவிட்டன. மேற்கு வங்கத்திலும் தங்களது செல்வாக்கை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அது வீணானது. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தான் அதிகமாக வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக ராம நவமி விழாவை இந்துத்வா அமைப்புகள் அங்கு கொண்டாடிய விதத்தை பார்த்து தாங்கள் வன்முறை கட்சி என்பதை அவர்களே தற்போது நிரூபித்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் பாஜ.வின் தாய் கட்சியான ஜன் சங்கத்தை வங்காள பார்ப்பனர் சியாம் பிரசாத் முகர்ஜி தான் தோற்றுவித்தார். ஆனால் எதிர்காலத்தில் அவலட்சணமான தந்திரங்களை கையாளும் வகையில் வாள் மற்றும் திரிசூலங்களை ஏந்தி வங்காளிகளை அவமதிக்கும் வெறுப்புணர்வோடு அக்கட்சி செயல்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ராமரை பாஜ அரசியல் ரீதியாக பிரச்னையாக்கிவிட்டது. மற்ற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் வாள் ஏந்தி அச்சுறுத்தலை ஏற்படுத்திய குற்றத்திற்காக பாஜ, ஆர்எஸ்எஸ், விஹெச்பி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மம்தா பானர்ஜிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் குலதெய்வமான துர்கா பூஜையை மம்தா பானர்ஜி செயல்படுத்தி வருகிறார். ராமர் குறித்த தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எதிரணி முகாமின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அவர் செயல்படுகிறார். ‘‘ ராமரே துர்காவை மலர் தூவி தான் வணங்கியுள்ளார். வாள் ஏந்தி அல்ல. மேலும் ராவணனை அழிக்க ராமர் வன்முறையை கையில் எடுக்கவில்லை’’ என்று பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இந்துத்வா அமைப்புகள் முயற்சிக்கின்றன. மேற்கு வங்கத்தில் பல வாரங்கள் முகாமிட தயாராக இருக்கிறோம் என்று அமித்ஷாவும், மோகன் பகத்தும் தெரிவித்துள்ளனர். மேலும் 42 பாஜ தலைவர்கள், அமைச்சர்கள் கொண்ட படையை அனுப்பி மம்தாவின் படையை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் ராம நவமி விழாவால் தவிடு பொடியானது.

இது குறித்து பெங்காலி இந்துக்கள் கூறுகையில்,‘‘ பாஜ, ஆர்எஸ்எஸ், விஹெச்பி தொண்டர்கள் வாள் ஏந்தி கோஷங்களை எழுப்பியதன் மூலம் அவர்கள் ராமநவமியை பக்தியோடு கடைபிடிக்கவில்லை என்பதை காட்டுகிறது. வெறுப்பை தான் ஏற்படுத்தியுள்ளது. அந்த முழுகாட்சியும் அவர்கள் பெங்காலி இல்லை என்பதை காட்டுகிறது.

வட இந்தியாவில் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏளனத்தை ஏற்படுத்தும் வகையில் மாட்டு அரசியல் செய்து வருகின்றனர். மாட்டு இறைச்சி கூடங்கள் அனைத்தையும் விரைவில் மூடும் வகையில் செயல்படுகின்றனர். அபராதமும், ஆயுள் தண்டனை வழங்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. பசுக்களை அதிகம் விரும்பு பெங்காலிகளிடம் இந்த கூப்பாடு அபத்தமாக தான் இருக்கும். பாஜ.வின் இந்த கோஷம் இங்கு மந்தமாக தான் இருக்கும்’’ என்றனர்.

கடந்த ஜனவரியில் பாஜ துணை அமைப்பான ஸ்வதிகார் பங்ளா அறக்கட்டளை சார்பில் காஷ்மீர் மற்றும் பாலோசிஸ்தான் அகதிகளுக்கான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கல்கத்தா கிளப் முன்பதிவு செய்யப்பட்டது. ஏற்பாட்டாளர்களின் உண்மையான நோக்கம் இன வாதத்தை தூண்டும் நடவடிக்கை என்பதை அறிந்த கிளப் நிர்வாகம் இந்த நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து விலகிக் கொண்டது.

மேலும், முன் பதிவை ரத்து செய்வதாக ஸ்வதிகர் பங்ளா அறக்கட்டளைக்கு வரலாற்றிலேயே முதன்முறையாக கடிதம் எழுதியது. அதில் ‘‘கிளப் வளாகத்தில் சுமூக சூழ்நிலை தன்மை உறுதிபடுத்த வேண்டும்’’ என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கத்தா கிளப் என்பது நடுத்தர பெங்காலிகளின் கோட்டையாகும். இந்த கருத்தரங்கம் நடந்தால் கிளப் வளாகத்தில் மட்டுமின்றி நகரத்திலும் சுமூகமான சூழ்நிலைக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இந்த முடிவை கிளப் நிர்வாகம் எடுத்தது.

ராம நவமி விழா மூலம் பாஜ தொண்டர்கள் செயல்பாடை கண்டு கிளப் நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று பலரும் கூறி வருகின்றனர். பெங்காலிகளின் தாராளமயம் மற்றும் மதசார்பின்மை நம்பிக்கைக்கு எதிரான சிந்தனைகளை பாஜ கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் அல்லது திரிணமும் காங்கிரஸ் தான் மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருந்துள்ளது.

அதனால் இந்துத்வா தேசியவாதம் இங்கு எடுபடாது. இந்திய தேசியவாதம் தான் இங்கு செல்லுபடியாகும். மவுலானா அப்துல் கலாம் ஆசாத் கொல்கத்தாவில் குடியேறும் முடிவை எடுத்தது தற்செயலான விஷயம் கிடையாது. இது ஒரு உறுதியுடன் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவாகும். நவீன இந்தியா உருவாக தான் கொல்கத்தாவில் இடம் உண்டு. இந்துத்வா இந்தியா உருவாக இடம் கிடையாது என்று ராம்மோகன் ராய் தெரிவித்திருந்தார். மதசார்பற்ற மற்றும் நாட்டுபற்றுள்ள சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் பக்கம் தான் பெங்காலிகள் சாய்வார்கள். சாவர்கர் அல்லது கோல்வாக்கர்களுக்கு இங்கு இடமில்லை.

சுதந்திரத்திற்கு பின் 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தை ஆண்டது. எமர்ஜென்சிக்கு பின் கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடித்து 34 ஆண்டுகள் தக்க வைத்திருந்தனர். இவர்களை திரிணமுல் காங்கிரஸ் வெளியேற்றியது. ஆனால் ஜன் சங்கம், பாஜ, ஆர்எஸ்ஸ் நலிவுற்று தான் இருந்தது. இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி தான் நகர்ந்தள்ளது.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜ 17 சதவீத வாக்குகளை பெற்றது. இதற்கு முன் இந்தகட்சி இவ்வளவு வாக்குகள் பெற்றதில்லை. 1987ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3 சதவீத வாக்குகளை பெற்றது. 1991ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீதமும், 2011 சட்டமன்ற தேர்தலில் 6 சதவீத வாக்குகளையும் பெற்றது.

2014ம் ஆண்டு தேர்தல் மூலம் 24 சட்டமன்ற தொகுதிகளில், குறிப்பாக மம்தா தொகுதியிலும் பாஜ அதிக வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதமாக குறைந்தது. அதுவும் 3 தொகுதிகளில் மட்டுமே. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மேற்கு வங்கம் எட்டாக் கனி என்பது தெரியும். அதை எளிதில் பறித்து ருசிக்க முடியாது என்பதும் தெரியும். அதனால் வாள் ஏந்தி ராமநவமி விழா மூலம் இந்த கனவை நினைவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இது மிகவும் கடினம்.

More articles

Latest article