மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அன்றாட விவகாரங்களை பாஜக நிர்வாகிகள் கவனிக்க முடியுமா என்று இந்திய அரசாங்கத்தின் (GoI) முன்னாள் செயலாளரான EAS சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து திரும்பப் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் BEL நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரங்களை இந்த நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பொதுத்தளத்தில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ECI இன் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு எழுதிய கடிதத்தில், “பாஜக, ஒரு அரசியல் கட்சியாக, BEL இன் விவகாரங்களை நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது ஒரு தவிர்க்க முடியாத அனுமானத்திற்கு வழிவகுக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர சிப் உள்ளிட்ட EVM களின் முக்கிய அம்சம் குறித்த தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள BEL இன் செயல்பாட்டை பிஜேபி தொடர்ந்து கண்காணித்து வருகிறது..”
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) குழுவில், குறைந்தபட்சம் நான்கு பாஜக நிர்வாகிகள் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாதுகாவலர் என்ற முறையில் அதன் பங்கை முழுமையாக உணராமல் அதன் கண்களை மூடிக்கொண்டு வெளிப்படையாக ஆளும் பாஜகவினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள் இயக்குனர்களாக அங்கம் வகிப்பது குறித்த EAS சர்மா-வின் இந்த கடிதம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.