சென்னை; வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது, வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி வரும் 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக அமைச்சரான ஐ.பெரியசாமி, ஐ.பி.எஸ் அதிகாரியான ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ. பெரியசாமி, ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துா்கா, சங்கா் ஆகிய 7 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2013-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் அமைச்சா் ஐ. பெரியசாமி தவிர மற்றவா்களில் சிலரை விடுவித்தும், சிலா் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அமைச்சா் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன் செப்டம்பர் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செப்டம்பர் 30-ம் தேதி, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.