சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பதவி ஏற்றார். திமுக பதவி ஏற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், இன்றும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு, மகளிருக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மநீம வலியுறுத்தல்.
ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்திலும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மநீம வலியுறுத்தி உள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தைக் கையில் எடுத்தன.
இந்நிலையில், ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.
அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.