சென்னை:
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக அவர் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டல் சரவணபவன் ஊழியரான பிரின்ஸ் சாந்தகுமார் (ஜீவஜோதி கணவர்) கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் அண்ணாச்சிக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை 2009ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பெயிலும் பெற்றார். அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்யப்பபட்டிருந்தது.
இந்த வழக்ககில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ராஜகோபாலுக்கு விதிக்கப் பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த நிலையில், தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போது உடல்நலமில்லாமல் படுக்கையில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் ராஜகோபால், சிறைச்சாலைக்கு செல்வாரா? அல்லது மீண்டும் உச்சநீதி மன்றத்தை நாடி விலக்கு பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.