சிவகங்கை: கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், கீழடியில் சாயப்பட்டறைகள் செயல்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல்துறை மூலம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. கொந்தகை அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதுபோல கடந்த வாரம் ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
6 கட்ட அகழாய்வில் கீழடியில் மட்டும் சுடுமண்ணால் ஆன கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. கீழடி நகரம் தொழில்சார்ந்த நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஏற்கனவே கட்டிடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அந்த கட்டிடங்களில் தண்ணீர் உள்ளே வருவதற்கான ஒரு அமைப்பும், தண்ணீர் வெளியேறக்கூடிய ஒரு அமைப்பும் கண்டறியப்பட்டது. தற்போது, 7ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் விளிம்பு பகுதியில் அழகிய வேலைப்பாடு களுடன் அமைந்திருந்தன. இது சிறிய தொட்டி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. சுமார் 44 செ.மீ உயரமும், 77 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த தொட்டியின் முழு அமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற தொட்டிகள், நெசவுத்தொழிலுக்கான சாயம் கலப்பதற்காக பயன்படுத்தும் தொட்டியாக இருந்திருக்கும் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர் இதனால், கீழடியில் நெசவு தொழில் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.
ஏனென்றால் நெசவு தொழிலுக்கு பயன்படும் குண்டு, ஊசி, சுடுமண்ணால் ஆன சின்னங்கள் ஏராளம் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள தொட்டியில் முதல் 2 உறைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. மேலும் தோண்டும் பட்சத்தில் மேலும் பல அரிய போருட்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 7வது கட்ட அகழ்வாயு பணிகள் செப்டம்பர் வரை நடைபெறும்.