கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவையில் திமுகவினர் ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை எதிர்த்து போராடிய அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுத்து திமுகவினர் வாக்கு சேகரித்து வருவதாக அதிமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தி.மு.க.,வினர் குனியமுத்தூர் பகுதியில், வாக்காளர்களுக்கு, ‘ஹாட் கேஸ்’ வழங்குவதாக, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், பேராசிரியர்.கல்யாணசுதரம் மற்றும் எட்டு கட்சியினர், ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்னை துவங்கியது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், கல்யாணசுந்தரம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அடைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த காட்சிகளில் திமுக கிளை அலுவலகம் ஒன்றின் வாசலில் பொது மக்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மற்றொரு வீடியோவில் இருசக்கர வாகனத்தில் ஹாட் பாக்ஸ் மூட்டையை தூக்கி செல்வதும், அவர்களை பின் தொடர்ந்த நபர் செல்போன் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்வதை பார்த்ததும் ஹாட் பாக்ஸ் மூட்டையுடன் இருக்கும் நபரை இறக்கிவிட்டு விட்டு வேகமாக செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரும், கட்சியினரும் ஸ்டேஷன் முன்பு திரண்டதோடு, இலவசப் பொருட்களை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்தனர். மேலும், அதிமுகவினர் கொடுத்த தகவலின்பேரில், கோவை நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள குடோனில் திமுகவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆதாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் ஹாட் பாக்ஸ்களை கைப்பற்றிய நிலையில், மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருப்பதால், அதனை தகர்க்க அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் வியூகம் வகுத்து திமுக செயல்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையிலேயே தங்கி களப்பணி ஆற்றி வருகிறார். தேர்தல் தேதி நெருங்கி உள்ள நிலையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாடுகள் எழுந்துள்ளனர்.
அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவே கோவையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்ததது கையும், களவுமாக பிடிபட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் ஹாட்பாக்ஸ் ஏற்றி வந்த குட்டியானை வாகனத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த கோவை குனியமுத்தூர் காவல் நிலைய போலீசாரும், பறக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலும், காவல் நிலையத்திலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் முழுவதும் திமுக பொறுப்பாளர்கள் வீட்டில் பரிசு பொருட்களை குவித்து வைத்துள்ளனர் என்றும், எனவே அனைவரது வீடுகளிலும் உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காவல்நிலையத்தை அதிமுகவினர் தொடர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அதுபோல கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 90-வது வார்டு கோவைப்புதூர் பெருமாள் கோயில் வீதியில் நள்ளிரவு 2.30 மணிக்கு வாக்காளர்களுக்கு விநியோகிக்க பரிசுப் பொருட்களை திமுகவினர் எடுத்துச் செல்வதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, அந்த பகுதி மக்கள், அங்கு வந்த காரை சிறை பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும்படையினரும், துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா தலைமையில் போலீஸார் அங்கு வந்தனர். ஆனால், அவர்கள் காரை சோதனையிடாமல் அனுப்பி வைத்ததாககூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர், இதுவும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், ”கோவையை கலவர பூமியாக்க திமுகவினர் முயற்சிக்கின்றனர். ரவுடிகளை இறக்கி அதிமுக வினரையும், மக்களையும் தாக்குகின்றனர்” என்று தெரிவித்தார். இதற்கிடையே, குனியமுத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தங்கியிருந்த வீட்டின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்துள்ளனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியும் உடைந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால், ஹாட் பாக்ஸ் விநியோகம் தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அவர்களது மனுவில், கோவை மாவட்டத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளை கொண்டு திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாகவும், இதனை தடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடமும், காவல்துறை கண்காணிப்பாளரிடமும், அதிமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர்களது மனுவில், கோவை மாவட்டம் முழுவதும் திமுகவினரின் ஏற்பாட்டின் பேரில் சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து தேர்தல் பணிகளில் மேற்கொள்வதாகவும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் காவல்துறையினர் போட்டு வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். இதனால் கோவை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இதில் தலையிட்டு கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வழிவகை செய்ய வேண்டுமென கேட்டுககொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சமி, 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ் கொண்டு வரப்பட்டு திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வது வருவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாட் பாக்ஸ் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிய வரும்…