பெங்களூரு: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து என அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடங்கின. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வாகனங்கள், சரக்கு போக்குவரத்து இயக்கப்பட்டன. பின்னர் தொற்று குறையத்தொடங்கியதும், நிறுத்தப்பட்ட ரயில்கள், படிப்படியாக இயக்கப்பட்டன. தற்போது, தெற்கு ரயில்வேயில் அனைத்து மெயில், விரைவு மற்றும்பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்தாலும் சில வழித்தடங்களில் இன்னும் முழுமையாக ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் வைப்பதைத் தொடர்ந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெங்களூர் – ஒசூர் இடையே நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு ரயில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இன்று காலை யஷ்வந்பூரில் இருந்து புறப்பட்டு, 7.50 மணிக்கு ஓசூர் வந்தடைந்தது. மீண்டும் 8.15மணிக்கு புறப்பட்டு பெங்களூர் சென்றடைந்தது.