விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சாட்சிகள் அளித்த 45 பேரில் 28 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்ட நிலையில், முன்னாள் ஆட்சியரும் பிறழ் சாட்சியாக மாறினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 45 பேர் பொன்முடிக்கு எதிராக சாட்சிகள் கூறிய நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஏற்கனவே சாட்சிகள் கூறிய பலரும் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். இது கடுமையாக விமர்சனங்களை எழுப்பி உள்ளது. சாட்சிகள் மிரட்டப்பட்டு வருவதால் உயிருக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி ஒரு மணி நேரம் 35 நிமிடம் சாட்சியம் அளித்துள்ளார். இவரும் பிறழ் சாட்சியாக சாட்சியம் அளித்தாரா அல்லது நேர்மையாக சாட்சியம் அளித்தாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் இதுவரை 45 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று (ஆகஸ்டு 5ந்தேதி) விசாரணைக்கு வந்ததபோது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.
அரசு தரப்பு 46-வது சாட்சியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது ஓய்வு பெற்றவருமான பழனிச்சாமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேரில் ஆஜரானார். அப்போது அவர், பகல் 12 மணிக்கு இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். அவர், தான் கடந்த 2008 முதல் 2011 வரை விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றியதாகவும், வானூர் தாசில்தார், விழுப்புரம் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கையின் அடிப்படை யிலும், அவர்கள் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்தும் ராஜமகேந்திரன் பெயரிலும், கவுதமசிகாமணி பெயரிலும் செம்மண் குவாரி உரிமத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது என்றுகூறி சாட்சியம் அளித்தார்.
அப்போது செம்மண் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நீதிபதி கேட்ட சில கேள்விகளுக்கும் பழனிச்சாமி, உரிய பதில்களை 1 மணி நேரம் 15 நிமிடம் நேரமாக சாட்சியம் அளித்தார். பிறகு உணவு இடைவேளை முடிந்து மீண்டும் 2.10 மணிக்கு முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜரானார். அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை 2.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முழுவதையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறும் என உத்தரவிட்டார்.
என்ன நடக்குது? அமைச்சர் பொன்முடிமீதான ‘செம்மண் குவாரி’ வழக்கில் ‘பல்டி சாட்சி’ எண்ணிக்கை 21ஆனது!