டில்லி
மருத்துவக் கட்டணம் செலுத்தாத நோயாளிகளின் பிணத்தை மருத்துவமனையினர் வைத்திருக்கக் கூடாது என டில்லி அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை சீரமைக்க டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. சுகாதாரத்துறை பொது இயக்குனர் கீர்த்தி பூஷன் தலைமையில் அமைந்த இந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகள் அளித்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஒரு அறிக்கையை மருத்துவமனைகளுக்கு அனுப்பி உள்ளது.
இந்த அறிக்கை குறித்து டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், “தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமல் இறந்து போனவர்களின் பிணத்தை தராமல் சில மருத்துவமனைகள் மறுக்கின்றன. அவ்வாறு பிணத்தை வைத்திருக்கக் கூடாது. மரணமடைந்தோருக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மரணம் அடைந்தோருக்கு இறுதி நிகழ்வுகள் நிகழ்த்துவதை தடை செய்வது தவறாகும். அதே நேரத்தில் மருத்துவ மனைகள் தங்களுக்கு வர வேண்டிய கட்டணத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என அரசு கூறவில்லை. அதற்கான சட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் எடுப்பதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை.
தேசிய அளவில் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். இது குறித்து நோயாளிகளுக்கு முழுமையாக விளக்குவது மருத்துவர் கடமையாகும். இதுபோல பல அறிவுரைகள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏதும் குறை இருந்தால் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தெரிவிக்கலாம்” எனக் கூறி உள்ளார்.