பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜீஸை டியூப் வழியாக உடலுக்குள் செலுத்தியதால் அந்த நபர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த மருத்துவமனை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சாத்துக்குடி சாற்றை பிளேட்லெட்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்றுவரும் மோசடி கும்பல் குறித்து தகவல் கிடைத்தது.
பிரயாக்ராஜ் நகரின் பம்ரௌலி பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற 28 வயது இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜால்வா பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனை மற்றும் டிராமா சென்டரில் சிகிச்சைக்காக அக். 16 ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு 8 யூனிட் பிளேட்லெட் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
மூன்று யூனிட் மட்டுமே கிடைத்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் கொடுத்த தகவலை அடுத்து அவர் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டு மீதமுள்ள 5 யூனிட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இதனை செலுத்திய பின் பிரதீப் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அக். 19 ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், பிரதீப் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் அந்த மருத்துவமனை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரதீப்புக்கு கலப்பட ரத்த பிளேட்லெட் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ரத்த பிளேட்லெட் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
கலப்பட இரத்தம் மற்றும் பிளேட்லெட் மோசடியால் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இரத்த பிளேட்லெட்டும் சாத்துக்குடி சாரும் ஒரே நிறத்தில் இருப்பதை வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்நகரின் பிரபல ரத்த வங்கியின் பெயரை அதன் மீது ஒட்டி ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை எளிதில் ஏமாற்றிய இந்த கும்பலிடம் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட போலி இரத்த பிளேட்லெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிளேட்லெட்டுகள் மாற்றப்பட வேண்டிய நோயாளிகளை குறிவைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
பிளேட்லெட்டுகளை வெளியிடங்களில் இருந்து வாங்கும் இந்த கும்பல் அதில் மூன்றில் இரண்டு பங்கு சாத்துக்குடி சாறை கலந்து புதிய பாக்கெட்டுகளில் அடைத்து 4000 முதல் 8000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளது உ.பி.யில் மட்டுமன்றி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.