பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்…
மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வேறு சில பாதிப்புகளும் இருந்தன.
முன்பணமாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்திய அவரது மகன், மருத்துவமனைக்குச் சென்று பின்னர் தந்தையைப் பார்க்கவில்லை.
கொரோனா பாதிப்பு காரணமாக குடும்பத்தோடு, அவர் வீட்டில்,தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.
முதியவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
முதியவரின் உடல் நிலை குறித்த தகவல்கள், தனிமைப் படுத்தப்பட்டிருந்த அவரது குடும்பத்துக்கு, போன் மூலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்தது.
15 நாட்கள் சிகிச்சை அளித்தும் முதியவரைக் காப்பாற்ற முடியவில்லை.
ஆனால் 16 லட்சம் ரூபாய் ’’பில்’’லை தீட்டி இருந்தது, மருத்துவமனை நிர்வாகம்.
அதாவது, சடலமாகக் கொடுக்கப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் பில்.
கொரோனாவை பயன்படுத்தி அங்குள்ள தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிப்பதாக ஏற்கனவே பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், இது லேட்டஸ்ட்.
‘ மும்பையில் எல்லா மருத்துவமனைகளும் இந்த சிகிச்சைக்கு இவ்வளவு தொகை தான் வசூலிக்கின்றன’’ என்று ,-
16 லட்சம் ரூபாய் பில்’லுக்கு, நியாயம் கற்பிக்கிறார், மருத்துவமனை முதலாளி.
தந்தையின் சடலத்தையும், பில்லையும் பார்த்து, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார், மகன்.
– ஏழுமலை வெங்கடேசன்