போபால்,

உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் இறைச்சிக்கடைகளை மூடும் படலம் தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், அனுமதியில்லாத இறைச்சிக் கடைகள்,  பசு வதைக்கூடங்களை மூட  நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இது சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல் என சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஹோசங்காபாத் என்ற பாஜக நகர சேர்மன் அகிலேஷ் காந்தல்வால் என்பவர், ஆதித்யநாத்தின் சட்ட விரோத  இறைச்சிக் கடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார்.

அவரது முகநூலில், புனித நகரமான ஹோசங்காபாத்தில் சட்ட விரோத இறைச்சிக் கடைகளுக்கு மட்டுமல்ல, ஆடு, மீன் உள்பட அனைத்து இறைச்சிகளுக்கும் தடைவிதிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.  தான் எழுதியிருக்கும் இந்தக்  கருத்துக்கு எதிர்வினை என்ன என்பதை பார்த்துவிட்டு  அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.      

மேலும் அவர், மத்தியபிரதேசம் முழுக்கவும் இறைச்சிக்குத் தடைவிதிப்பது நல்லது.

குறைந்தபட்சம் புனிதமான நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஹோசங்காபாத் போன்ற  நகரங்களில் மாநில அரசு அதை நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

முகநூலில் அகிலேஷ் காந்தல்வாலின் கருத்து வைரலாக பரவியதையடுத்து அதற்கு

ஏராளமானவர்கள்  விருப்பமும், விமர்சனங்களும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான அகிலேஷ் காந்தல்வால், ஆதித்யநாத்தின் சிஷ்யர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.