சென்னை; கிழக்கு கடற்கரை சாலையில்  பழுதாகி நின்ற லாரியின் பின்புறம், அதிவேகமாக வந்த கார் மோதியதில், அந்த காரில் வந்த  நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையின் கோவளம் அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர் வாகனத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இறந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த செம்மஞ்சேரி மீனவ பகுதியில் சென்னையை நோக்கிவந்த ஈச்சர் லோடு லாரி பழுது காரணமாக, சாலையோரம் நிறுத்தப்பட்டது.  அந்த சாலையில், அதிகாலை நேரத்தில்  அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், சாலையோரம் நின்றிருந்த லாரியை கவனிக்காமல், அதன் பின்பகுதியில் மோதியது. இதில், கார் முழுவதுமாக லாரியின் பின்பகுதிக்குள் சிக்கிய நிலையில், அதில் இருந்த 4 இளைஞர்களும் உடல் நசுங்கி பலியாகினர்.

இதுகுறித்து  தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பாளர்கள் விரைந்து வந்து,   கிரேன் உதவியுடன் லாரியை தூக்கி காரை வெளியே எடுத்தனர். பின்னர் காரில் இருந்த இளைஞர்களின் உடல்களை மீட்டனர்.  அவர்களின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த  விபத்துக்கு  காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்து நடந்த பகுதி குறுகலான பகுதி என்பது ஒரு காரணமாக இருந்தாலும்,  அந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும் விபத்து நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி,  சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த  பழுதான லாரி எந்தவித எச்சரிக்கை அறிவிப்பையும் வைக்காமல் சாலையில் நிறுத்தப்பட்டதும் காரணமாக கூறப்படுவதுடன், காரில் வந்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  மேலும் காரில் இருந்த இளைஞர்கள் யார், எங்கு சென்று வந்தனர், மதுபோதையில் இருந்தனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.