ஹாங்காங்

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வைகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை ஒட்டி இந்த மசோதாவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்தது. ஆயினும் இந்த மசோதாவை முழுமையாக விலக்கிக் கொள்ளக் கோரி இரு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டங்கள் நடந்தன.

இந்தப் போராட்டத்தில் பல ஜனநாயக உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் என பல  தரப்பட்டவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்க சீனா தனது ராணுவத்தை ஹாங்காங் எல்லை ஓரத்தில் குவித்து வருவதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதன் இரண்டாம் நினைவு நாள் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு அரசு தடை விதித்தது. தடையை மீறி நடந்த இந்தப் பேரணியில்  போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் போராட்டம் வெடித்து வன்முறையாக மாறியது. இந்த போராட்டம் மேலும் பல இடங்களில் பரவியதால் ஹாங்காங் முழுவதும் அமைதி இழந்து காணப்பட்டது.

இன்று ஹாங்காங் தலைவர் கேரி லார்ன் அரசு இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து இந்த இரு மாதப் போராட்டத்தை  முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.