
ஹாங்காங்: குற்றவாளியை ஒப்படைப்பது தொடர்பாக ஹாங்காங் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரக்கணக்கான மக்கள், ஹாங்காங் வீதிகளில் பேரணி நடத்தினர்.
இந்தப் புதிய திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஹாங்காங்கை சேர்ந்தவர்கள், வழக்கு விஷயங்களில் சீனாவின் முக்கியப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்றும், இதன்மூலம் இத்தனை ஆண்டுகால ஹாங்காங்கின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1997ம் ஆண்டு, பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் பகுதி, சீனாவிடம் ஒப்படைக்கப்படும்போதே, அதன் பொருளாதார சுதந்திரம் எப்போதும் உள்ளதைப்போல் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் தரப்பட்டது.
ஆனால், தற்போது அந்த சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில், புதிய விதிமுறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுவதால், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக, அவ்வப்போது அமைதியான முறையில் பெரிய பேரணிகள் நடத்தப்படுகின்றன.
ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனி சுயாட்சிப் பகுதியாகும். இங்கு வாழும் மக்கள், சீனாவின் உள்பகுதிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.