ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த CK Hutchison Holdings நிறுவனத்தின் துணை நிறுவனம் செய்த ஒப்பந்தம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பனாமாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, CK Hutchison Holdings நிறுவனத்திற்கு பனாமா கால்வாயின் இரு முனைகளிலும் உள்ள முக்கிய துறைமுகங்களை இயக்கும் உரிமை பறிபோகும் என கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பு, பனாமா நீதித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

பனாமாவின் நீதிமன்ற வளாகமான பாலஸ் ஆஃப் ஜஸ்டிஸ் கில் போன்ஸ், “பனாமா போர்ட்ஸ் கம்பெனி” (PPC)க்கும் அரசுக்கும் இடையே செய்யப்பட்ட துறைமுக ஒப்பந்தம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளது.

PPC என்பது, கோடீஸ்வரர் லி கா-ஷிங் கட்டுப்பாட்டில் உள்ள CK Hutchison நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் பால்போவா மற்றும் கிரிஸ்டோபால் துறைமுகங்களை மேம்படுத்துதல், கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பானது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

PPC நிறுவனத்தில் CK Hutchison நிறுவனம் 90 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 1997ல் தொடங்கிய இந்த துறைமுக இயக்க உரிமை, 25 ஆண்டுகளுக்கானது. இது 2021ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு முன்பாக, கடந்த ஆண்டு ஜனவரியில் பனாமாவின் தலைமை கணக்காயர் அலுவலகம் (Comptroller) நடத்திய ஆய்வில், இந்த ஒப்பந்தம் மூலம் பனாமா அரசுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த ஆய்வு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற அதே நாளான ஜனவரி 20 அன்று தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997ல் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், நாட்டின் நலன்களுக்கு எதிரானது என்றும், அப்போது இருந்த சில அரசு அதிகாரிகள் அரசின் நலனுக்கு பதிலாக தனியார் நிறுவன நலனுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

ஆய்வு விவரங்களின்படி, 1997 முதல் 2023 வரை PPC நிறுவனம் இந்த இரு துறைமுகங்களில் இருந்து 3.78 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய நிலையில், பனாமா அரசுக்கு கிடைத்தது வெறும் 236 மில்லியன் டாலர் மட்டுமே என்று கூறப்படுகிறது.

அரசு சட்ட நடவடிக்கை எடுத்தபோது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் PPC நிறுவனம், சட்டம் (Rule of Law) மதிக்கப்பட வேண்டும் என பனாமா அரசை கேட்டுக்கொண்டது.

இதற்கிடையில், CK Hutchison நிறுவனம் தனது பனாமா துறைமுக நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்க முயன்று வருகிறது. இது, உலகளாவிய அளவில் 23 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் BlackRock நிறுவனம் தலைமையிலான மேற்கத்திய கூட்டமைப்புக்கு, துறைமுக சொத்துகளில் 80 சதவீத பங்குகளை விற்கும் ஆரம்ப ஒப்பந்தத்தை CK Hutchison செய்தது. இதில், உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனம் MSC-க்கு சொந்தமான TiL Group நிறுவனமும் இடம்பெற்றது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால், 23 நாடுகளில் உள்ள 43 துறைமுகங்கள் உரிமை மாற்றம் பெற்றிருக்கும்.

இந்த விற்பனை அறிவிப்பு, ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு எதிராக வர்த்தகப் போரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் வெளியானது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை சீனா கடுமையாக கண்டித்தது. மேற்கத்திய முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்களை விற்பது, சீனாவின் “பெல்ட் அண்ட் ரோட்” (Belt and Road Initiative) திட்டத்துடன் தொடர்புடைய தேசிய நலன்களுக்கு துரோகம் என பீஜிங் குற்றம்சாட்டியது.

இதன் பின்னர், 2025 மார்ச் மாதத்தில், சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் (State Administration for Market Regulation) இந்த ஒப்பந்தம் குறித்து எதிர் விசாரணை (Antitrust) தொடங்கியது. இதனால், அந்த விற்பனை நடைமுறையில் நிறுத்தப்பட்டது.

[youtube-feed feed=1]